தங்க தமிழ்ச்செல்வனை தவிர மற்ற எம்.எல்.ஏ.க்கள் வழக்கை வாபஸ் பெறும் நிலையில் இல்லை!தினகரன்
தங்க தமிழ்ச்செல்வனுடைய திடீர் முடிவு குறித்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அளித்த பேட்டியில்,
சென்னை அடையாறில் உள்ள என்னுடைய வீட்டுக்கு தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் நேற்று (நேற்று முன்தினம்) வந்தார்கள். அவர்களுடன் சேர்ந்து இந்த தீர்ப்பு குறித்து ஆலோசித்தோம்.
தங்க தமிழ்ச்செல்வன் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் இருக்கும்போதே, தீர்ப்பு திரும்ப திரும்ப தாமதம் ஆக வேண்டாம். நாம் அனைவரும் வழக்கை வாபஸ் பெற்றுவிட்டு, தேர்தல் கமிஷன் அறிவிக்கும் தேர்தலில் போட்டியிட்டு, அதே தொகுதியில் குக்கர் சின்னத்தில் நின்று நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று சொன்னார்.
அதற்கு மற்ற எம்.எல்.ஏ.க்கள் நாம் தேர்தலில் போட்டியிட்டு நிச்சயம் வெற்றி பெறுவோம். ஆனால் இப்போது சட்டப்பூர்வமாக போராடுவோம். 3-வது நீதிபதி விசாரணையில் வரும் தீர்ப்பில் கண்டிப்பாக நமக்கு சாதகமாக இருக்கும். அதிலும் நாம் எதிர்பார்த்த தீர்ப்பு வரவில்லை என்றால் சுப்ரீம் கோர்ட்டு சென்று போராடி நிச்சயம் அங்கே வெற்றி பெறுவோம். ஏனென்றால் எடியூரப்பா வழக்கில் கூட எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டது செல்லாது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. அதே அடிப்படையில் நமக்கும் தீர்ப்பு வரும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
அதையும் மீறி நமக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கவில்லை என்றால், இடைத்தேர்தலை சந்திக்கலாம் என்றும் தங்க தமிழ்ச்செல்வனை தவிர மற்ற எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்தனர்.
தங்க தமிழ்ச்செல்வன் வக்கீலுடன் வந்து வருகிற திங்கட்கிழமை தன்னுடைய ராஜினாமா கடிதத்தையும், வழக்கு வாபஸ் பெறுவதற்கான மனுவையும் கொடுக்க இருப்பதாக என்னிடம் வந்து தெரிவித்தார். அப்போது வக்கீல்கள் 3-வது நீதிபதியிடம் கொடுங்கள் என்று ஆலோசனை வழங்கினார்கள். அப்படியே செய்யுங்கள் என்று நானும் கூறினேன்.
மற்ற (17 எம்.எல்.ஏ.க்கள்) எம்.எல்.ஏ.க்களின் நிலைப்பாடு இது அல்ல. அவர்கள் சட்டப்பூர்வமாக போராடும் நிலைப்பாட்டில் தான் இருக்கிறார்கள். தங்க தமிழ்ச்செல்வன் தொடர்ந்து என்னுடன் தான் இருப்பார். தேர்தல் வந்தாலும் குக்கர் சின்னத்தில் தான் போட்டியிடுவார்.
நாங்கள் தான் உண்மையான அ.தி.மு.க. என நிரூபித்து கட்சியையும், இரட்டை இலையையும் மீட்போம். தொடர்ந்து சட்டரீதியாக போராடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.