வடகொரியா அதிபரை ரஷியா வருமாறு விளாடிமிர் புதின் அழைப்பு..!
எலியும் பூனையுமாக கடந்த பல ஆண்டுகளாக இருந்த அமெரிக்கா – வடகொரியா சமீபத்தைய சிங்கப்பூர் சந்திப்புக்கு பின்னர் நண்பர்களாக மாறியுள்ளது. ஏவுகணை மனிதர் என டிரம்ப்பால் விமர்சிக்கப்பட்ட வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், கடந்த 12ம் தேதி சிங்கப்பூரில் டிரம்பை சந்தித்து பேசினார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், கிம் ஜாங் அன் சிறந்த மனிதர் என்றும், இருப்பினும் ஒருசில காரணங்களுக்காக வடகொரியா மீதான பொருளாதார தடைகள் தொடர்வதாக தெரிவித்தார்.
இந்நிலையில், வடகொரியாவின் மூத்த அதிகாரிகளில் ஒருவரான கிம் யோங் நம்-மை ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் சமீபத்தில் சந்தித்து பேசினார். அப்போது இருநாட்டு உறவுகள் குறித்து அவர்கள் பேசியதாக தெரிகிறது. அப்போது டிரம்ப் – கிம் சந்திப்பு குறித்து புதின் தனது மகிழ்ச்சியை தெரிவித்து கொண்டார்.
இந்த சந்திப்பின்போது கிம் ஜாங் அன்-னை சந்திக்க விரும்புவதாக கிம் யோங் நம்-யிடம், புதின் தெரிவித்துள்ளார். புதின் மற்றும் கிம் இடையேயான சந்திப்பு வரும் செப்டம்பர் மாதம் நடைபெறலாம் எனவும், இதற்கான அறிவிப்புகளை விரைவில் இருநாடுகளும் வெளியிடலாம் எதிர்பார்க்கப்படுகிறது.