தலித் சிறுவர்களை நிர்வாணமாக்கி தாக்குதல் – ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வுக்கு ராகுல் கண்டனம்..!
மராட்டிய மாநிலத்தில் மற்றொரு சாதியினருக்கு சொந்தமான கிணற்றில் குளித்த தலித் சிறுவர்கள் மீது உயர் சாதி வகுப்பினர் நடத்திய தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இத்தகைய கொடூர செயல்களில் ஈடுபட்ட அந்த மனித மிருகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
மராட்டிய மாநிலம் ஜல்கோன் மாவட்டத்தில் 2 தலித் சிறுவர்கள், ஆடையின்றி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு தாக்கப்பட்டுள்ளனர். அவர்கள் செய்த தவறு, மற்றொரு சாதியினருக்கு சொந்தமான கிணற்றில் குளித்ததுதான்.
ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதாவின் மனுதர்மம் பரப்பிய இத்தகைய நச்சுத்தன்மை நிறைந்த வெறுப்புணர்வு அரசியலை நாம் எதிர்க்காவிட்டால், வரலாறு நம்மை மன்னிக்காது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.