2020-ம் ஆண்டுக்குள் சென்னை, பெங்களூரு நகரங்களில் நிலத்தடி நீர் வற்றிவிடும் அபாயம்..!

Default Image

இந்தியாவின் நிலத்தடி நீர்மட்டம், குடிநீர் தேவை மற்றும் மாநிலங்களின் நீர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்து முதன் முதலாக நிதிஆயோக் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. மத்திய நீர்வளத்துறை மற்றும் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்றல் அமைச்சகங்களுடன் இணைந்து தயாரிக்கப்பட்ட ‘ஒன்றிணைந்த நீர் மேலாண்மை குறியீடு’ என்ற அந்த அறிக்கையை நீர்வளத்துறை மந்திரி நிதின் கட்காரி நேற்று வெளியிட்டார்.

நிதி ஆயோக்கின் இந்த அறிக்கை இந்திய மாநிலங்களின் நீர் மேலாண்மை குறைபாட்டை அப்பட்டமாக விளக்கி இருப்பதுடன், குடிநீர் தட்டுப்பாட்டால் இந்தியா சந்திக்கப்போகும் இன்னல்களையும் அதிர்ச்சிகரமாக எடுத்துரைத்து உள்ளது. இதில் முக்கியமாக 2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் தண்ணீர் தேவை 2 மடங்கு அதிகரிக்கும் எனவும், இதனால் கோடிக்கணக்கான மக்கள் மிகுந்த துயரத்துக்கு உள்ளாவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அந்த அறிக்கை மேலும் கூறுகையில், ‘இந்தியாவின் தண்ணீர் தேவையில் 40 சதவீதத்தை பூர்த்தி செய்யும் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. 2020-ம் ஆண்டுக்குள் சென்னை, டெல்லி, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட 21 நகரங்களில் நிலத்தடி நீர் முற்றிலும் தீர்ந்துவிடும். இதனால் அந்த நகரங்களில் வசிக்கும் 10 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். இந்த நிலை தொடர்ந்தால் 2050-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் அளவுக்கு சரிவு ஏற்படும்’ என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

இந்தியாவில் தற்போது சுமார் 60 கோடி பேர் கடும் குடிநீர் பற்றாக்குறையை சந்தித்து வருவதாகவும், நாட்டின் 70 சதவீத நீர் நிலைகள் மாசடைந்து இருப்பதாகவும் கூறியுள்ள நிதி ஆயோக், பாதுகாப்பான குடிநீர் இல்லாததால் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் மரணமடைந்து வருவதாகவும் கூறியுள்ளது.

நீர் மேலாண்மை விவகாரத்தில் இந்திய மாநிலங்களை, பொது மாநிலங்கள், வடகிழக்கு மற்றும் இமயமலை மாநிலங்கள் என இரண்டாக நிதி ஆயோக் பிரித்துள்ளது. இதில் பொது மாநிலங்கள் பட்டியலில் குஜராத், மத்திய பிரதேசம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் மராட்டிய மாநிலங்கள் முதல் 5 இடங்களில் உள்ளன.

வடகிழக்கு மாநிலங்களில் திரிபுரா முதலிடத்திலும், இமாசல பிரதேசம், சிக்கிம், அசாம் போன்ற மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களையும் பெற்றுள்ளன. ஜார்கண்ட், அரியானா, உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்கள் மிகவும் மோசமான நீர் மேலாண்மையை கொண்டிருப்பதாக நிதி ஆயோக்கின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்