ஆப்கான் வீரர்களை வெற்றி கோப்பையுடன் போஸ் கொடுக்க அழைத்த கேப்டன் ரஹானே..!
சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் ஆப்கானிஸ்தான் அணிக்கு, டெஸ்ட் போட்டியில் விளையாட ஐசிசி கடந்த ஆண்டு அங்கிகாரம் அளித்தது. அதைத்தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் டெஸ்ட் போட்டியில், தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் இந்தியாவை எதிர்கொண்டது.
பெங்களூருவில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் விஜய் 107, தவான் 105, பாண்டியா 71, ராகுல் 54 ரன்கள் எடுத்தனர்.
இதையடுத்து பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸில் 109 ரன்களுக்கும், 2-வது இன்னிங்ஸில் 103 ரன்களுக்கும் ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம், இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனைப் படைத்தது. இந்த போட்டி இரண்டு நாள் மட்டுமே நீடித்தது.
இந்நிலையில், இப்போட்டி முடிந்த உடன் இந்திய அணிக்கு வெற்றி கோப்பை வழங்கப்பட்டது. கோப்பை வழங்கும் நிகழ்ச்சியில், இந்திய வீரர்கள் கோப்பையுடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்க நின்றனர். அப்போது, இந்திய அணியின் கேப்டன் ரகானே ஆப்கானிஸ்தான் அணியினரை அழைத்து, அவர்களையும் கோப்பையுடன் புகைப்படம் எடுக்க வைத்தார். இதனால் ஆப்கானிஸ்தான் வீரர்களும், ரசிகர்களும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.
போட்டி என்பதையும் தாண்டி, முதல் போட்டியை விளையாடிய ஆப்கானிஸ்தானை பாராட்டும் வகையிலும், நட்புறவை வெளிப்படுத்தும் வகையிலும் செயல்பட்ட ரகானேவை பலரும் பாராட்டி வருகின்றனர்.