காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட பத்திரிக்கை ஆசிரியர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது..!
காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள ‘ரைசிங் காஷ்மீர்’ என்ற பத்திரிகையின் ஆசிரியர் சுஜாத் புகாரி (வயது 50). இவர் நேற்று தனது அலுவலகத்தில் இருந்து காரில் லால்சவுக் என்ற இடத்தில் நடைபெறும் இப்தார் விருந்துக்காக சென்றுகொண்டிருந்தார். அவருடன் பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட சிலர் இருந்தனர். பத்திரிகை அலுவலகத்தில் இருந்து வெளியில் வந்த சிறிது நேரத்தில் அவரது கார் மீது மர்மநபர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.
இதில் சுஜாத் புகாரியும், ஒரு பாதுகாப்பு அதிகாரியும் அந்த இடத்திலேயே குண்டு காயமடைந்து பரிதாபமாக இறந்தனர். மற்றொரு போலீஸ்காரர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளது. காஷ்மீர் முதல்-மந்திரி மெகபூபா முப்தி இந்த சம்பவத்துக்கு கண்டனமும், புகாரி மரணத்துக்கு இரங்கலும் தெரிவித்து இருந்தார்.
இந்தநிலையில், சுஜாத் புகாரி வீட்டிற்கு காஷ்மீர் முதல்-மந்திரி மெகபூபா முப்தி, முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லா, அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு சுஜாத் புகாரியின் உடலுக்கு உறவினர்கள் இறுதி சடங்குகளை செய்தனர். பின்னர் சுஜாத் புகாரி இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.