குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம் காரணமாக ஊருக்குள் கடல் நீர் புகுந்தது..!

குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதற்கிடையே தென் தமிழக கடல் பகுதியில் பலத்த காற்றுக்கு வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையமும் கடல் தகவல் சேவை மையமும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்காரணமாக குமரி மாவட்டம் குளச்சல் முதல் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வரையிலான கடல் பகுதியில் 15-ந் தேதி நள்ளிரவு வரை 10 முதல் 14 அடி உயரத்திற்கு ராட்சத அலைகள் எழும்பும் வாய்ப்பு உள்ளது. மணிக்கு 35 கிலோ மீட்டர் முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் எனவும் இது மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றாக மாற வாய்ப்பு உள்ளதாகவும் கூறியிருந்தது.

இதன் காரணமாக குமரி மேற்கு மாவட்ட கடல் பகுதியில் நேற்று இரவு முதல் பலத்த சூறைக்காற்று வீசியது. அதோடு அலைகளின் கொந்தளிப்பும், கடல் சீற்றமும் பயங்கரமாக இருந்தது. ராமன்துறை, மார்த்தாண்டம்துறை, வள்ளவிளை, முள்ளூர்துறை, இரயுமன்துறை பகுதிகளில் ஏற்பட்ட கடல் சீற்றம் காரணாக தூண்டில் வளைவுகள் சேதம் அடைந்தது.

இதனால் கடல் நீர் ஊருக்குள் புகுந்து வீடுகள், சாலைகள் சேதம் அடைந்தது.

மேற்கு மாவட்ட கடற்கரை கிராமங்களில் ஏற்பட்ட கடல் சீற்றம் நேற்று கடியப்பட்டினம் கடற்கரை கிராமத்திலும் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. இங்குள்ள அந்தோணியார் தெருவில் சிலுவைதாசன், பெர்க்மான்ஸ், பத்ரோஸ், கார்மல், அல்லேஸ், மரியசபினாஸ், அந்தோணி, அருமைநாயகம், சூசைநாயகம், ஜேசையா, ஜான், பிரடின் ஆகியோரின் வீடுகள் சேதம் அடைந்தது.

இதில் 3 பேரின் வீடுகள் பலத்த சேதம் அடைந்தது. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஊரில் உள்ள பள்ளிக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். இன்னும் பலர் வீடுகளை காலி செய்து விட்டு வெளியூர்களில் உள்ள உறவினர் வீடுகளுக்கு சென்றனர்.

கன்னியாகுமரியில் இன்று காலை கடல் நீர் மட்டத்தில் தாழ்வு ஏற்பட்டது. இதனால் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் படகு சேவை காலை 7.45 மணிக்கு தொடங்கவில்லை.

இதனால் படகில் சவாரி செய்ய காத்திருந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் கடல் நீர் மட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியது. அதன்பின்பு விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு படகு சேவை தொடங்கியது.

கன்னியாகுமரி முக்கடல் சங்கம பகுதியில் சூரியோதயம் பார்க்க அதிகாலையில் சுற்றுலா பயணிகள் கூடுவார்கள். இன்று காலையிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சூரியோதயம் காண காத்திருந்தனர்.

ஆனால் இன்று கன்னியாகுமரியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் சூரியோதயத்தை பார்க்க முடியவில்லை.

இதுபோல திரிவேணி சங்கமத்துறையில் சுற்றுலா பயணிகள் கடலில் நீராடுவது வழக்கம். இன்று அரபிக்கடல் பகுதியில் ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக கடற்கரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட சுற்றுலா போலீசார் பயணிகள் யாரையும் கடலில் குளிக்க அனுமதிக்கவில்லை.

அவர்கள் அனைவரும் கடற்கரையில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்