வங்கி கணக்கில் தவறுதலாக ரூ.9000 கோடி டெபாசிட் ஆன நபர் சைபர் கிரைமில் புகார்..!
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே நெய்க்காரப்பட்டி எனும் ஊரை சேந்த ராஜ்குமார் என்பவர் , சென்னை கோடம்பாக்கம் பகுதியில் வாடகை கார் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இவரது வங்கி கணக்கிற்கு தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் இருந்து 9000 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டதற்கான குறுஞ்செய்தி வந்துள்ளது.
கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி மதியம் 3 மணி அளவில் இந்த குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனை அப்போது எதோ தவறுதலாக செய்தி வந்துள்ளளது என நினைத்துள்ளார் ராஜ்குமார். அதன் பிறகு சோதனை செய்வதற்காக தனது நண்பருக்கு 21 ஆயிரம் ரூபாய் அனுப்பியுள்ளார்.
அப்போது அந்த பண பரிவர்த்தனை நடைபெற்ற பிறகு தான் தனது அக்கவுண்டில் 9000 கோடி ரூபாய் வந்து சேர்ந்துள்ளதை ராஜ்குமார் உறுதி செய்துள்ளார். இதனை அடுத்து வங்கி கிளை அவரை போன் மூலம் தொடர்பு கொண்டு வங்கிக்கு நேரடியாக வந்து பேச அழைத்துள்ளது. அதன் பிறகு மறுநாள் காலையில் வங்கிக்கு சென்றுள்ளார் வாகன ஓட்டுநர் ராஜ்குமார்.
அப்போது தவறுதலாக நடைபெற்ற இந்த பணபரிவார்த்தணை பற்றி ராஜ்குமாரிடம் வங்கி அதிகாரிகள் விளக்கியுள்ளனர். மேலும், இந்த விவகாரம் குறித்து பொதுவெளியில் கூற வேண்டாம் என வங்கி அதிகாரிகள் உறுதியளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், சைபர் கிரைமில் தனது வங்கிக் கணக்கில் தவறுதலாக 9000 கோடி டெபாசிட் ஆனது தொடர்பாக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மீது கார் ஓட்டுநர் ராஜ்குமார் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், தனது கணக்கை, வங்கி தவறாக பயன்படுத்துவதாகவும், இது தொடர்பாக வங்கி தரப்பில் உரிய விளக்கம் அளிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.