Magalir Urimai Thogai : 6 மாதத்தில் மகளிர் உரிமை தொகை நிறுத்தப்படும்.! அண்ணாமலை கடும் விமர்சனம்.!
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தற்போது ‘என் மண் என் மக்கள்’ எனும் பெயரில் தமிழகம் முழுவதும் நடை பயணம் மேற்கொண்டு உள்ளார். இந்த நடைபயணத்தின் போது, மத்தியில் பாஜக ஆட்சியின் 9 ஆண்டுகால சாதனை பற்றி மக்களிடம் எடுத்துரைத்து வருகிறார். மேலும், தமிழகத்தில் ஆளும் திமுக பற்றியும் தனது விமர்சனங்களை முன்வைத்தார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் நடை பயணம் மேற்கொண்டார். அப்போது பொதுமக்கள் மத்தியில் அவர் பேசுகையில், தமிழக அரசு செயல் படுத்தி உள்ள மகளிர் உரிமை தொகை திட்டம் குறித்தும், திமுக ஆட்சி குறித்தும் விமர்சித்து பேசினார்.
அவர் கூறுகையில், தமிழக கஜானாவில் தற்போது சுத்தமாக வருமானம் இல்லை. கஜானா காலியாக உள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கு கூட கஜானா தாங்காது. இப்போது செயல்படுத்தப்பட்டுள்ள மகளிர் உரிமைத் தொகை திட்டமானது, ஆறு மாதத்திற்கு மட்டுமே செயல்படுத்தப்படும். அதன் பிறகு நிதி பற்றாக்குறை காரணமாக நிறுத்தப்படும் என்று பேசினார்.
மேலும், அவர் கூறுகையில் இந்தியாவிலேயே நம்பர் 1 மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று முதல்வர் கூறுகிறார். ஆனால், அது அதிகமாக கடன் வாங்குவதில் தமிழகம் முதலிடம். சுமார் 7 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு தமிழகம் கடன் வாங்கி உள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் வாரிசு எம்எல்ஏக்கள், வாரிசு எம்பிக்கள் உள்ளனர் என்றும் விமர்சித்தார்.
தமிழகத்திற்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறது. அதிக அளவில் நிதியை ஒதுக்கி வருகிறது. 2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை வந்துள்ளது என்றும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று உடுமலையில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார்.