33% Reservation : மகளிர் இடஒதுக்கீட்டை செயல்படுத்த மத்திய அரசுக்கு விருப்பமில்லை.! ராகுல்காந்தி காட்டம்.!
புதிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியது. மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுனராம் மேக்வால் கொண்டுவந்த இந்த சட்ட மசோதாவை மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேறியது.
இந்த சட்டமசோதாவானது, மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் மக்களவை தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகு 2026இல் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சட்டத்திற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தாலும், சட்டமசோதா நிறைவேற்றப்படும் கால தாமதத்தை விமர்சனம் செய்தும் வருகின்றனர்.
இது தொடர்பாக, இன்று டெல்லியில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை உடனடியாக அமல்படுத்த வேண்டும். ஆனால், பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படுவதற்கு இரண்டு தடைகள் உள்ளன.
அவர், ஒன்று மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்னொன்று மக்களவை தொகுதி மறுவரையறை என இரண்டு நிபந்தனைகள் உள்ளன. அதை சரி செய்து விரைவில் நிறைவேற்ற வேண்டும். ஆனால் இந்த சட்டத்தை நிறைவேற்ற பல ஆண்டுகள் ஆகும். இந்த சட்ட மசோதாவை நிறைவேற்ற மோடி அரசு விரும்பவில்லை என்று மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கூறினார்.
அதே போல, பாராளுமன்றமானது குறிப்பிட்ட சிலரது கட்டுப்பாட்டில் இருப்பதாக குற்றம் சாட்டினார். பாராளுமன்றத்தில் வேலை செய்யும் 90 பேரில் 3 பேர் மட்டுமே ஓபிசி பிரிவினர். இது எப்படி என எனக்கு புரியவில்லை. இது பற்றி பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் ராகுல்காந்தி குறிப்பிட்டார்.