Manipur : மணிப்பூரில் மீண்டும் பதற்றம்.! 5 இளைஞர்கள் கைது., போலீசாருக்கு எதிராக மக்கள் போராட்டம்.!
கடந்த மே மாதம் முதலாக மணிப்பூரில் இரு சமூத்தினரிடையே ஏற்பட்ட கலவரமானது நாட்டையே உலுக்கியது . அதிலும், மணிப்பூரில் இரு பெண்களுக்கு ஒரு கொடூர கும்பலால் நேர்ந்த துயரம் பலரது இதயத்தை நொறுக்கியது. இந்த கலவரமானது, மைத்தேயி இன மக்கள் தங்களை பழங்குடி இன பிரிவில் சேர்க்க கோரியபோது, அதற்கு பழங்குடியின மக்களான குக்கி இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாதால் தொடங்கியது.
இதில் இரு பக்கமும் உயிர்சேதங்கள் ஏற்பட்டாலும் குக்கி இன மக்களுக்கு அதிக அளவில் உயிர்சேதங்கள் ஏற்பட்டன. 130க்கும் அதிகமானோர் இந்த கலவரத்தில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அங்கு இன்னும் பல்வேறு இடங்களில் பத்திரிக்கையாளர்களுக்கும், இணையதள சேவைக்கும் அனுமதி இல்லாத காரணத்தால் உண்மையான நிலவரம் பற்றி முழு விவரமும் வெளிவரவில்லை.
ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் இன்னும் மணிப்பூர் இயல்பு நிலைக்கு திரும்பாமல் தான் இருந்து வருகிறது. இருந்தும் பாதுக்காப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளதால், அங்கு முன்பு அரங்கேறியது போல பெரிய கலவரங்கள், உயிர்சேதங்கள் ஏற்படாமல் தடுக்கப்பட்டு வருகின்றன.
பாதுகாப்பு படையினர் தவிர்த்து ஒவ்வொரு கிராமத்திற்கும், அந்த கிராமத்து இளைஞர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி , ஒரு கிராமத்தை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்ட வந்த 5 இளைஞர்களை ஆயுதங்கள் வைத்து இருந்ததாக கூறி பாதுகாப்பு படையினர் கைது செய்ததாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து கிராமத்து மக்கள் அப்பகுதி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். உடனடியாக காவல்துறையினர் கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசி போராட்டக்காரர்களை அங்கிருந்து கலைத்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.