ADMK – BJP : மத்தியில் பிரதமர் மோடி.. தமிழகத்தில் எடப்பாடி என நான் கூற மாட்டேன்.! இது அண்ணாமலையின் அதிரடி பாதை.!  

BJP President Annamalai - ADMK Leader Edappadi Palanisamy - PM Modi

அதிமுக தலைவர்கள் பற்றி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து விமர்சித்து வருகிறார் என கூறி நேற்று முன்தினம் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், தற்போது அதிமுக – பாஜக கூட்டணி இல்லை எனவும், தேர்தல் நேரத்தில் இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என்றும், இனி அண்ணாமலை எங்கள் தலைவர்களை விமர்சித்து பேசினால் அதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் பேசியிருந்தார்.

இந்நிலையில் இன்று மதுரையில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு , அதிமுக – பாஜக இடையே எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. அண்ணாமலை சொன்ன விதம் தான் தவறு என கூறினோம். அண்ணா குறித்து பேசிய கருத்துக்களை தவறு என்றுதான் சொன்னோம். அதிமுக – பாஜக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை.  அண்ணாமலை இப்படி பேசுகிறாரே என்ற வருத்தத்தையே பதிவு செய்தோம், வேறு எதுவும் இல்லை என்றும்,

அண்ணாமலை நடைபயணம் செல்லட்டும், கட்சியை வளர்க்கட்டும், அதில் எங்களுக்கு கவலை இல்லை என்றார்.  மோடி ஜி, அமித்ஷா ஜி, ஜேபி நட்டா ஜி உள்ளிட்டோர் எங்கள் பொதுச்செயலாளரை மதிக்கிறார்கள், எங்களை பொறுத்தவரை மத்தியில் பிரதமர் மோடி, தமிழகத்தில் அடுத்த முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி எனவும், இதனை பாஜகவினர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று கோவையில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, செல்லூர் ராஜு பேசியதற்கு நான் பதில் கூற முடியாது. என்னை பொறுத்தவரை நான் தெளிவாக இருக்கிறேன். யார் பிரதமர் மோடியை ஏற்றுக்கொள்கிறார்களோ அவர்களை நானும் ஏற்றுக்கொள்வேன். எங்களது சித்தாந்தம் வேறு அதிமுக ஆரம்பிக்கபட்ட நோக்கம் வேறு.

1972இல் பாஜக சங்கமாக ஆரம்பிக்கப்பட்டு, 1980இல் பாஜக கட்சியாக மாற்றம் செய்யப்பட்டது. எல்லா கட்சியும் ஒன்று கிடையாது. அவர்கள் சித்தாந்தம் வேறு வேறாக தான் இருக்கும். எங்களுக்கு பொதுவான தலைவராக மோடி தான் எங்களை இணைக்கிறார். கூட்டணிக்குள் பொதுவாகவே இந்த முட்டல் மோதல்கள் எழுவது சகஜம் தான் என கூறினார்.

சனாதானத்தை பற்றி அதிமுக பேச முடியாது. அவர்கள் சித்தாந்தம் வேறு. நான் சனாதனத்தை பற்றி தீவிரமாக பேசுவேன். செல்லூர் ராஜு கூறுவது போல என்னால் கூற முடியாது. மத்தியில் பிரதமர் மோடி, முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி வர வேண்டும் என்பதை நான் கூற மாட்டேன்.

பாஜக தமிழகத்தில் ஆட்சிக்கு வர வேண்டும் என்று தான் நான் நினைத்து வேலை செய்து கொண்டு வருகின்றேன். பாஜக தமிழகத்தில் தீவிரமாக  வேரூன்ற நான் ஆக்ரோஷமாக வேலை செய்வேன். திமுக – அதிமுக சேர்ந்து இங்கு 65 சதவீத ஓட்டுக்களை தான் வாங்குகிறார்கள். மூன்றாவது கட்சிக்கு இங்கு மிக பெரிய இடம் உள்ளது. நான் திமுகவை அடியோடு வெறுக்கிறேன்.

எங்கள் வாக்கு சதவீதம் , வளர்ச்சி பற்றி இப்போது பேச மாட்டேன். பாஜக போட்டியிடும் போது வரும் வாக்குகள் தான் அதற்கு பதில். தற்போதைக்கு கூட்டணி இல்லை என கூறுவது, இது என்ன சினிமா படமா ? பிரேக் எடுக்க .? எங்களை பொறுத்தவரை ஜனவரி மாதம் 11 வரை ‘என் மண் என் மக்கள்’ மூலம் பாஜகவின் 9 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகள் பற்றி மக்களிடம் எடுத்துரைப்பேன். மற்றபடி அதிமுகவில் 4 பேர்  கூறும் கருத்துக்கு நான் பதில் கூற விரும்பவில்லை என செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்