Stock Market: நாள் முடிவில் 700 புள்ளிகளுக்கு மேல் சரிந்த சென்செக்ஸ்.! 66,800.84 புள்ளிகளாக நிறைவு.!
முந்தைய வாரங்களில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வந்த இந்தியப் பங்குச்சந்தை குறியீடுகள், இந்த வார வர்த்தக நாளில் வீழ்ச்சியுடனே வர்த்தகமாகி வருகிறது. அந்தவகையில், இன்றைய வர்த்தக நாளில் 67,080 புள்ளிகள் என சரிவுடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ், 700 புள்ளிகள் வரை சரிந்து வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.
அதன்படி, வர்த்தக நாளின் முடிவில் சென்செக்ஸ் 796.00 புள்ளிகள் சரிந்து 66,800.84 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி வர்த்தக நாளின் முடிவில் 231.90 புள்ளிகள் சரிந்து 19,901.40 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவுசெய்துள்ளது. இந்த வீழ்ச்சி முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.
அமெரிக்காவில் கடன் வட்டி வீதங்கள், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் போன்ற காரணங்களால் பங்குச்சந்தையானது வீழ்ச்சியுடன் வர்த்தகமாகி வருவதாக கூறப்படுகிறது. இன்று இரவு அமெரிக்க மத்திய வங்கியின் கடன் வட்டி விகிதம் ஆனது அறிவிக்கப்படவுள்ளது. அந்த வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டால் முதலீட்டார்கள் தங்களது பங்குகளில் மாறுபாடுகளை செய்கின்றனர்.
இதனால் ஒரே இரவில், அமெரிக்க குறியீடுகள்0.3 சதவீதம் வரை சரிந்தன. அதோடு, பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஆனது கடந்த மாதங்களில் இல்லாத அளவிற்கு உயர்ந்து 93 டாலர் ஆக உள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் லாபத்தைப் பதிவு செய்து பணத்தைப் பெற்றுக் கொள்கின்றனர்.இத்தகைய காரணங்களால் பங்குச்சந்தை வீழ்ச்சியை சந்தித்துள்ளது.