TNGovt: துணைவேந்தர் நியமனம்- ஆளுநர் அமைத்த குழுவை அதிரடியாக மாற்றிய தமிழ்நாடு அரசு!
சென்னை பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தர்களை தேர்வு செய்ய குழு அமைத்து சமீபத்தில் ஆளுநர் ஆர்என் ரவி உத்தரவிட்டிருந்தார். அதன்படி, ஒவ்வொரு பல்கலைக்கழகங்களுக்கும் தலா 4 உறுப்பினர்களை கொண்ட தேர்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், முதல் முறையாக யுஜிசியின் பிரதிநிதி, துணை வேந்தர்கள் நியமன தேர்வு குழுவில் இடம்பெற்றனர்.
ஏனெனில், பல்கலைக்கழக துணைவேந்தர்களை தேர்வு செய்யும் தேடுதல் குழுவில் யுஜிசி உறுப்பினர்கள் கட்டாயம் இல்லை என தமிழ்நாடு அரசு ஆளுநருக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில், அரசின் எதிர்ப்பை மீறி, தேர்வு குழுவில் யுஜிசியின் பிரதிநிதியை நியமித்து ஆளுநர் உத்தரவிட்டார். இந்த நிலையில், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு தமிழக அரசு சார்பில் தேடுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அதாவது, சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்ந்தெடுக்க, தமிழ்நாடு ஆளுநர் ரவி அமைத்த குழுவை மாற்றி அமைத்து தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. துணைவேந்தர் தேர்ந்தெடுக்க ஏற்கனவே ஆளுநர் ரவி குழு அமைத்த நிலையில், தற்போது புதிய குழு அமைத்து அரசிதழ் வெளியிடுள்ளது. துணை வேந்தரை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட ரத்தோர் பெயரை சேர்க்காமல் அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஆளுநர் அமைத்த தேடுதல் குழுவில் உள்ள கர்நாடக மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் பட்டு சத்தியநாராயணா ஒருங்கிணைப்பாளராக தொடருவார் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுபோன்று பல்கலைக்கழக சிண்டிகேட் பிரதிநிதியாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி தீனபந்து நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், பல்கலைக்கழக செனட் பிரதிநிதியாக முனைவர் ஜெகதீசன் குழுவில் இடம் பெற்றுள்ளார்.