Jawan Box Office: ரூ.1000 கோடியை நெருங்கியது ஜவான் திரைப்படம்! வசூல் வேட்டையில் தெறிக்கிவிடும் ஷாருக்கான்…
ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் ரூ.1000 கோடியை நெருங்கியுள்ளது, தற்போது உலகம் முழுவதும் ரூ. 907.54 கோடி வசூலை குவித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
கடைசியாக பதான் என்ற மிகப்பெரிய பிளாக் பஸ்டர் வெற்றி படத்தை வழங்கிய, பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 7-ஆம் தேதி திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், ஆகிய மொழிகளில் வெளியானது.
படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருவது போல் வசூலிலும் படம் பல சாதனைகளை படைத்தது வருகிறது. படம் வெளியான 12 நாட்களில் மொத்தமாக 883 கோடி வரை வசூல் செய்திருந்த நிலையில், அடுத்ததாக 13 நாட்களில் இப்படம் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, ஜவான் திரைப்படம் வெளியான 13 நாட்களில் உலகம் முழுவதும் 907..54 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதற்கிடையில், சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் 11 நாளில் உலக முழுவதும் வெறும் ரூ.492.50 கோடியை வசூலித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அது மட்டும் இல்லாமல், ஷாருக்கானின் இந்த பிளாக்பஸ்டர் திரைப்படம் வெளியான 13வது நாளில், இந்திய பாக்ஸ் ஆபிஸில் மட்டும் ரூ.500 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது, ஷாருக்கின் முந்தைய வெற்றி படமான பதான், இந்த மைல்கல்லை கடக்க 18 நாட்கள் ஆனது குறிப்பிடத்தக்கது.