போலி பாஸ்போர்ட் மூலம் நீரவ் மோடி தப்பிச்சென்று இருக்கலாம் என தகவல்..!
மும்பை வைர வியாபாரி நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்து உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இந்த ஊழல் அம்பலத்துக்கு வருவதற்கு முன்பே அவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டார்.முதலில் அவர் இங்கிலாந்தில் இருப்பதாக கூறப்பட்டது. பின்னர் அவர் அங்கு இருந்து வெளியேறி விட்டதாக தகவல்கள் வெளியாகின.
அவரை நாடு கடத்திக்கொண்டு வந்து வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வைக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதுதொடர்பான நடவடிக்கையை இந்தியா எடுக்கலாம் என இங்கிலாந்து அரசு வக்கீல்கள் கூறி உள்ளனர். எனவே இதற்கான நடவடிக்கையை சி.பி.ஐ. தொடங்கி உள்ளது.
இந்த நிலையில், நீரவ் மோடி தற்போது பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சில் பதுங்கியிருக்க கூடும் என்று ஆங்கில தொலைக்காட்சி செய்தி சேனல் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனவரி மாதம் முதல், ஒவ்வொரு நாடாக தப்பிச்சென்று வருவதாகவும், பிப்ரவரி மாதம் லண்டனிலும் பின்னர் அங்கிருந்து பாரீஸ், பிரான்சு என சென்று தற்போது பெல்ஜியத்தில் இருக்க கூடும் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டனுக்கு தனது ஒரிஜினல் பாஸ்போர்ட் மூலம் சென்ற நீரவ் மோடி, பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்ட பிறகு, பிரான்சுக்கு மார்ச் மாதத்தில் சென்று உள்ளார். நீரவ் மோடி ஒன்றுக்கு மேற்பட்ட பாஸ்போர்ட்களை வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நீரவ் மோடியிடம் சிங்கப்பூர் பாஸ்போர்ட்டும் உள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.