Women’s Reservation Bill: மகளிர் இட ஒதுக்கீடு மசோதா… மக்களவையில் இன்று விவாதம்!
தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் சிறப்பு கூட்டத்தொடர் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் முதல் நாள் மட்டும் சிறப்பு கூட்டத்தொடர் பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெற்ற நிலையில், நேற்று புதிய நாடாளுமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
அப்போது, புதிய நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு தரும் மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். இந்த மசோதாப்படி, மாநில சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்ற மக்களவையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும்.
மகளிருக்கு அளிக்கும் 33% இட ஒதுக்கீட்டில் மூன்றில் ஒரு பங்கு பட்டியலின பெண்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும். 15 ஆண்டுகளுக்கு இந்த மசோதா அமலில் இருக்கும். அதன் பிறகு வேண்டும் என்றால் நீட்டித்து கொள்ளலாம் என அறிவித்தார். இந்த மசோதாவுக்கு “நாரி சக்தி வந்தன்” என பெயரிடப்பட்டுள்ளது.
மசோதா நிறைவேறிய பிறகு நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகே இந்த மசோதா அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தொகுதிகளை மறுவரையறை செய்யும் பணி 2026ல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மீது நாளை விவாதம் நடைபெற உள்ளது. மசோதாவில் உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி வரையறை உள்ளிட்டவற்றை நீக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளனர். 2026ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி வரையறை உள்ளிட்ட பணிகள் முடிந்து, 2029 தேர்தலில் நடைமுறைக்கு வரும் என்பதால் மசோதா திருத்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதனால், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மீது காரசார விவாதம் இன்று மக்களவையில் நடைபெறும் என எதிர்பார்க்கபடுகிறது. மேலும், நாளை மாநிலங்களவையில் மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.