AIADMK: காற்றில் பறந்த மாணவர்களின் கல்விக் கடன் ரத்து.. முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம்!

Edappadi Palanisamy

மாணவர்களின் கல்வி கடனை உடனடியாக ரத்து செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பான அறிக்கையில், “மக்களை எளிதில் மறக்கடித்துவிடலாம்’ என்ற நம்பிக்கையுடன் திமுக, 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் இருந்தே, நிறைவேற்ற முடியாத பல்வேறு பொய்யான வாக்குறுதிகளை அளித்து தமிழக மக்களின் வாக்குகளைப் பெற்று, வெற்றியைப் பெற்றது.

அத்தேர்தலின் போது, பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசிய திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் 38 தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழகத்திற்கு சாதித்தது என்ன ? என கேள்வி எழுப்பியுள்ளார். 2021-ல் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது 520-க்கும் மேற்பட்ட நிறைவேற்ற முடியாத பல பொய்யான வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து, புறவாசல் வழியாக ஆட்சிக்கு வந்த திமுக அரசின் பொம்மை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும், அவரது கூட்டாளிகளும், தமிழக மக்களை ஏமாற்றிவிட்டதாக மனப்பால் குடித்துக்கொண்டிருக்கின்றனர்.

கடந்த 28 மாத கால விடியா திமுக ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள், ஊழல் புகார்கள். சென்னை உயர்நீதிமன்ற அறிவுரைக்குப் பிறகும் சிறையில் உள்ள ஒருவர் இலாகா இல்லாத அமைச்சராக உள்ளார். ஊழல் பணமான 30,000 கோடியை என்ன செய்வது என்று தெரியாமல் திணறுதல் என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் அனைத்து ஊடகங்களிலும் அணி வகுத்து வெளிவந்த போதும், திமுக அரசின் முதலமைச்சர் சிறிதும் ‘நா’ கூச்சமின்றி 100 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக ‘முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல்’ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தேர்தல் நேரத்தின் போது அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை ரூ. 1,000/- வழங்கப்படும் என அறிவித்துவிட்டு, தற்போது தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டுமே என்று, சுமார் 57 லட்சம் விண்ணப்பங்களை நிராகரித்திருப்பது விடியா திமுக அரசின் பித்தலாட்டத்திற்கு ஓர் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

மேலும், திமுகவின் தேர்தல் வாக்குறுதியில்,  தமிழ் நாட்டில் உள்ள பள்ளிகளில் பயின்று, தமிழகக் கல்லூரிகளில் பட்டப் படிப்பை மேற்கொள்ள வங்கிக் கடன் பெற்ற தமிழக மாணவர்கள், ஓராண்டு காலத்துக்குள் கடனை திரும்பச் செலுத்த இயலாவிட்டால், 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் கல்விக் கடனை அரசே ஏற்று திருப்பிச் செலுத்தும் என அறிவிக்கப்பட்டது.

மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என்ற வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்ட திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதாக கூறியுள்ளார். எனவே, 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதிப்படி கல்வி கடனை ரத்து செய்ய வேண்டும். 100 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக கூறுகிறார். நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் குறித்து வெள்ளை அறிக்கையை சட்டமன்றத்தில் முதலமைச்சர் வெளியிடுவாரா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்