Jawan Go To Oscars : ஜவான் படத்தை ஆஸ்கருக்கு அனுப்ப போறேன்! இயக்குனர் அட்லீ உறுதி!
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ஜவான். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் 2-வது வாரமாக நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. படம் பார்த்த அனைவரும் படம் நன்றாக இருப்பதாக தெரிவித்து வருகிறார்கள். ஹிந்தியை போல படம் தமிழிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், படம் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் வெற்றியை அடைந்துள்ள நிலையில், படத்தின் இயக்குனர் அட்லீ உற்சாகத்துடன் பேட்டி கொடுத்து வருகிறார். அந்த வகையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் “ஜாவான் திரைப்படத்தை ஆஸ்கருக்கு அனுப்ப திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அட்லீ ” நிச்சயமாக, எல்லாம் சரியாக அமைந்தால் ஜவான் திரைப்படம் கூட ஆஸ்கருக்கு செல்ல வேண்டும். ஒவ்வொரு முயற்சிகளையும் செய்யும்போது ஒவ்வொரு இயக்குனரும், சினிமாவில் பணிபுரியும் ஒவ்வொரு டெக்னீஷியனும், ஆஸ்கர் விருது வாங்குவது என்பது கனவாக இருக்கிறது. எனவே, நிச்சயமாக, நானும் ஜவான் திரைப்படத்தை ஆஸ்கார் விருதுக்கு கொண்டு செல்ல விரும்புகிறேன்.
நான் இப்போது கூறும் இந்த காணொளியை ஷாருக்கான் பார்க்கலாம் அப்படி பார்த்தால் என்னை அழைத்து இது விஷயமாக பேசுவார் என்று நினைக்கிறன். அப்படி இல்லை என்றாலும் கூட நானே ஷாருக்கான் சாரை நேரில் பார்க்கும்போது படத்தை ஆஸ்கார் விருதுக்கு அனுப்பி வைக்கலாமா? சார் என்று கேட்பேன்” எனவும் இயக்குனர் அட்லீ தெரிவித்துள்ளார்.
மேலும், ஜவான் திரைப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருவது போல் வசூலிலும் படம் பல சாதனைகளை படைத்தது வருகிறது. குறிப்பாக, 11 நாட்களில் படம் உலகம் முழுவதும் 858 கோடி வசூல் செய்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.