Vinayagar Statue issue: இரு நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பில் தலையிட முடியாது.! உச்சநீதிமன்றம் அதிரடி..
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, இந்து அமைப்புகள் சார்பில் ஆண்டுதோறும் விநாயகர் சிலைகள் வைக்கப்படக் கூடிய இடங்களில் இந்த ஆண்டும் சிலை வைத்து பூஜைகளை செய்துவருகின்றனர்.
இதற்கிடையில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்ற நபர் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் இருக்கும் தனது குடிசைகளில் தயார் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வீரப்பனை செய்யவிடாமல் காவல்துறையினர் தடை விதித்துள்ளதாகவும், அந்த தடையை நீக்கி விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய அனுமதிக்குமாறும் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கை தனிநீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரணை செய்து, மனுதாரர் தயாரித்த சிலைகளை விற்பனை செய்யலாம். ஆனால், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் கொண்டு தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைக்க அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார். இந்த உத்தரவை எதிர்த்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சார்பில் மேல்முறையீடு மனு செய்யப்பட்டது.
அந்த மனுவில், தனி நீதிபதியின் உத்தரவு மத்திய அரசின் சுற்றுச்சூழல் விதிக்கு எதிராக உள்ளது. விநாயகர் சிலைகள் இயற்கையான களிமண்ணால் செய்திருக்க வேண்டும். சுற்றுச்சூழலை மாசுபடுத்தக்கூடிய நச்சு வேதிப்பொருட்கள் அடங்கிய பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் போன்ற மூலப்பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படக்கூடாது, அதை தயார் செய்வதற்கும் அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு அவசர வழக்காக எடுத்து விசாரணை செய்யப்பட்ட நிலையில், தனிநீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விதித்த உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்து எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. அதன்படி, ‘பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ்’ அடங்கிய மூலப்பொருள்கள் மூலம் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
இதன்பிறகு பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலம் விநாயகர் சிலைகளை தயாரிக்க உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு விதித்த தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மேல்முறையீடு மனு மீதான விசாரணையின் போது, பிளாஸ்டர் ஆப் பாரிஸ் கொண்டு தயாரிக்கப்பட்ட சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க கூடாது என்பது சரியே.
இத்தகைய சிலைகளை தயாரிக்கத் தடை விதித்த எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பில் தலையிட முடியாது எனக்கூறி மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.