Heavy Fever : திருச்சியில் தீவிர காய்ச்சலுக்கு ஒரு பெண் உயிரிழப்பு.!
திருச்சி, திருவானைக்காவல் பகுதியை சேர்ந்த கனகவல்லி எனும் 38வயது பெண் தீவிர காய்ச்சல் காரணமாக அப்பகுதி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளனர். நேற்று இரவு அதிக காய்ச்சல் காரணமாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. அவருக்கு டெங்கு உள்ளிட்ட காய்ச்சலுக்கான அறிகுறிகள் இல்லை என மருத்துவர்கள் கூறிவந்தனர். இருந்தும், தீவிர காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வந்த கனகவல்லி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவருக்கு டெங்கு காய்ச்சல் இல்லை என்று மருத்துவர்கள் கூறினாலும், எதற்காக இறந்தார் என்ற சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது . திருச்சி அரசு மருத்துவமனையில் 8 பேர் தீவிர காய்ச்சல் காரணமாக உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு டெங்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை..
இதற்கு முன்னதாக திருவாரூர் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வந்த பயிற்சி மருத்துவர் சிந்து உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், டெங்கு காய்ச்சல் பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அதன் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் . அதே போல, கேரளாவில் நிபா வைரஸ் பரவல் காரணமாக தமிழக கேரள எல்லைகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.