Udhayanidhi Stalin : அண்ணா 115.! அண்ணா சிலைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர்தூவி மரியாதை.!
தமிழக முன்னாள் முதல்வர், தற்போது தமிழகத்தை ஆண்டு கொண்டு இருக்கும் திராவிட முன்னேற்ற கழகத்தை தோற்றுவித்தவர், எதிர்க்கட்சியாக இருக்கும் அண்ணா திராவிட முன்னேற்றத்திற்கும் தார்மீக தலைவராக இருப்பவர், தமிழ்நாடு என நமது மாநிலத்திற்கு பெயர் வர காரணமாக இருந்தவர் என பல்வேறு பெருமைகளை கொண்ட அறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் இன்று வெகு விமர்சையாக கட்சி பேதமின்றி கொண்டாடப்பட்டு வருகிறது.
இவரது பிறந்தநாளை முன்னிட்டு தான் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கலைஞர் மகளிர் உரிமை தொகை 1000 ரூபாய் திட்டத்தை அண்ணா பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் வைத்து துவங்கி வைத்துள்ளார். நேற்று முதலே குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
அதே போல, தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் அமைச்சர் சேகர் பாபு, மேயர் ப்ரியா ஆகியோர் உடன் இருந்தனர்.
இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சுயமரியாதை திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் தந்த பேரறிஞர் அண்ணா அவர்களுடைய 115 ஆவது பிறந்த நாளான இன்று, அண்ணா சாலையில் அமைந்துள்ள பேரறிஞரின் திருவுருவச்சிலைக்கு அருகே வைக்கப்பட்ட அண்ணாவின் திருவுருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செய்தோம். அண்ணா வழியில் அயராது உழைப்போம் – ஆதிக்கமற்ற சமுதாயம் அமைப்போம். என பதிவிட்டுள்ளார்.