Accident : தரையிறங்கும் போது இரண்டாக உடைந்த விமானம்… மும்பை விமான நிலையத்தில் 40 விமான சேவைகள் பாதிப்பு.!
ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து மும்பைக்கு VSR வென்ச்சர்ஸ் லியர்ஜெட் 45 விமானம் VT-DBL எனும் தனியார் ஜெட் விமானம் ஒன்று இரண்டு விமானிகள் மற்றும் 6 பயணிகளுடன் தரையிறங்க வந்துள்ளது.
இந்த விமானம் நேற்று மாலை 4 மணி அளவில் மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கும் சமயத்தில் ஓடுபாதையில் இருந்து விலகிவிட்டது. இதன் காரணத்தால் ஓடுபாதையில் மோதி விமானம் இரண்டு துண்டாக உடைந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
நல்ல வேலையாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. ஒரு விமானி மற்றும் ஒரு பயணி காயங்கள் ஏற்பட்டு தற்போது மும்பை கிழக்கு பகுதியில் உள்ள கிரிடிகேர் ஆசியா எனும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கண்ட விபத்து சம்பவத்தால் மும்பை விமான நிலையத்தில் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. அந்த சமயம் விமானங்கள் எதுவும் மும்பை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட அனுமதிக்கப்படவில்லை. அவைகள் தற்காலிகமாக கோவா மற்றும் அகமதாபாத்திற்கு திரும்பி விடப்பட்டன. இதன் காரணமாக பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.