Heavy Fever : தீவிர காய்ச்சல்… திருவாரூரில் பயிற்சி மருத்துவர் சிகிச்சையின் போது உயிரிழப்பு.!
கேரளா மாநிலத்தைச் சேர்ந்த சிந்து எனும் மருத்துவர், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து முடித்து, அதே திருவாரூர் அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களாக சளி, காய்ச்சல் போன்றவை இருந்துள்ளது. அதற்கான மருந்துகளை எடுத்து வந்துள்ளார். இருந்தும் காய்ச்சல் குணமாக காரணத்தால், நேற்று அவர் திருவாரூர் அரசு மருத்துவமனையிலேயே உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு டெங்கு, டைபாய்டு உள்ளிட்ட காய்ச்சலுக்கான சோதனைகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால், அவற்றில் எதுவுமே இல்லை என்ற விவரம் வெளியாகி உள்ளது. இருந்தும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு இருந்த வேளையில் இன்று அதிகாலை சிந்து உயிரிழந்துள்ளார்.
தீவிர காய்ச்சல் காரணமாக பயிற்சி மருத்துவர் உயிரிழந்த விவகாரம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் இறந்ததற்கான காரணம் குறித்து அறிவதற்காக இவரது மருத்துவ அறிக்கைகள், மருத்துவ மாதிரிகள் சென்னைக்கு அனுப்பப்பட்டு உள்ளன.
அங்கு சோதனை முடிவுகள் வெளியான பின்பு தான் சிந்து எவ்வகையான காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார் என்ற விவரம் தெரிய வரும் என கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழகத்தில் தற்போது நிபா வைரஸ் தாக்கம் அதிகரிக்க தொடங்கிய காரணத்தால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நேரத்தில் காய்ச்சல் காரணமாக பயிற்சி மருத்துவர் உயிரிழந்த விவகாரம் பேசிபொருளாக மாறியுள்ளது.