ADMK – BJP : நெருங்கும் தேர்தல்.. டெல்லி விசிட்… எடப்பாடி பழனிசாமி – அமித்ஷா சந்திப்பு.! என்ன நடந்தது.?
நாடாளுமன்ற தேர்தல் வருவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ள காரணத்தால் தேர்தல் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆளும் பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியும் (NDA), காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 28 கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியும் தங்கள் தேர்தல் வேலைகளை தீவிர படுத்தி உள்ளன.
இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக தங்கள் தேர்தல் வேலைகளை ஆரம்பித்து உள்ளன. அதன் முதற்படியாக தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று டெல்லி சென்றார்.
அங்கு பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட எடப்பாடி பழனிச்சாமி, பின்னர் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷாவை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது அண்மையில் டெல்லியில் வெற்றிகரமாக நடந்து முடிந்த ஜி-20 உச்சி மாநாடு நிகழ்வை சிறப்பாக நடத்தியதற்கு மத்திய அமைச்சருக்கு எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்தார்.
அதன் பிறகு மதுரையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக மாநாடு குறித்தும் அதில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்று வெற்றிகரமாக நடத்தி முடித்தது குறித்தும் மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் எடப்பாடி பழனிச்சாமி எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது.
மேலும், ஒரு 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியை தமிழகத்தில் பலப்படுத்த முயற்சிகள் மேற்கொள்வது, மேலும், தங்களுக்கு சாதகமான மக்களவைத் தொகுதிகளை தேர்ந்தெடுத்து அதில் தற்போது தேர்தல் வேலைகளை துவங்குவது, உள்ளிட்ட நாடாளுமன்ற தேர்தல் குறித்த பல்வேறு ஆலோசனைகளை எடப்பாடி பழனிச்சாமி மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் மேற்கொண்டார் என கூறப்படுகிறது.
தேர்தல் தொகுதி பங்கீடு உள்ளிட்ட மற்ற விவகாரங்கள் அடுத்தடுத்த சந்திப்புகளின் போது பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.