கொரிய தீபகற்பத்தில் அமெரிக்க ராணுவ ஒத்திகை காலவரையறை இன்றி நிறுத்தம்..!
எலியும் பூனையுமாக கடந்த பல ஆண்டுகளாக இருந்த அமெரிக்கா – வடகொரியா சமீபத்தைய சிங்கப்பூர் சந்திப்புக்கு பின்னர் நண்பர்களாக மாறியுள்ளது. ஏவுகணை மனிதர் என டிரம்ப்பால் விமர்சிக்கப்பட்ட வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், நேற்று முன்தினம் டிரம்பை சந்தித்து பேசினார்.
இரு தலைவர்களின் சந்திப்புக்கு பின்னர் சில ஒப்பந்தங்கள் இருதரப்புக்கும் இடையே கையெழுத்தானது. அதில், வடகொரியா அணு ஆயுதங்களை முழுமையாக அழிப்பது, வடகொரியா மீதான பொருளாதார தடையை அமெரிக்கா நீக்குவது உள்ளிட்ட அம்சங்கள் அடங்கும். வரலாற்று சிறப்புமிக்க இந்த சந்திப்புக்கு உலக நாடுகள் அனைத்தும் வரவேற்பை தெரிவித்தன.
இந்நிலையில், கொரியா தீபகற்பத்தில் அமெரிக்கா அடிக்கடி நடத்தி வந்த ராணுவ ஒத்திகைகள் கால வரையறையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவ உயரதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
டிரம்ப் – கிம் சந்திப்புக்கு பிறகு இருநாட்டு உறவுகளை மேம்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பு இருக்கும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். கொரிய தீபகற்பத்தில் சுமார் 3 லட்சம் அமெரிக்க ராணுவ வீரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.