Asia Cup 2023 : சிக்ஸர் அடித்து 10,000 ரன்களை கடந்தார் கேப்டன் ரோஹித் சர்மா.! ஒருநாள் கிரிக்ட்டில் சாதனை.!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. இதில் கொழும்பு மைதானத்தில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, தசுன் ஷனக தலைமையிலான இலங்கை அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் நல்ல தொடக்கத்தை அளித்து வருகின்றனர். இலங்கைக்கு எதிராக 50 வது ஒருநாள் போட்டியிலும் , தனது 248வது சர்வதேச ஒருநாள் போட்டியிலும் விளையாடி வரும் ரோஹித் சர்மா 22 ரன்களை கடந்தால் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனை பெறுவார் என்ற நிலை இருந்தது.
இந்நிலையில், 6.4 ஓவரில் 17 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் ரஜிதா வீசிய பந்தை சிக்ஸர் பறக்கவிட்டு, 23 ரன்கள் எடுத்து ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார் கேப்டன் ரோஹித் சர்மா. இந்திய அளவில் அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களை கடந்த 2வது வீரர் ரோஹித் சர்மா.
முதலிடத்தில் கடந்த 2018ஆம் ஆண்டே விராட் கோலி தனது 205 வது ஒருநாள் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை கடந்து இருந்தார். 3வது இடத்தில் சச்சின் டெண்டுல்கர் 259வது ஒருநாள் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை கடந்து அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களை கடந்த 3வது வீரராக உள்ளார்.
இதுபோக, இதுவரை உலக அளவில் ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதம் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா வைத்துள்ளார். இந்திய அளவில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் ரோஹித் சர்மா வைத்துள்ளார்.