குழந்தைகளைத் திட்டி வழக்கலாமா..? அது நல்லதா..?
- பிள்ளைகளைப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் திட்டுவது தங்கத்தைப் புடம் போடுவதுபோல… இன்றைய குழந்தைகளுக்கு அறிவுத்திறனும் நினைவுத்திறனும் அபாரமாக இருக்கின்றன. அவர்களைக் கொண்டாடவேண்டிய இடங்களில் கொண்டாடி, குட்டவேண்டிய இடத்தில் குட்டி வளர்த்தால், மிகப்பெரிய சாதனைகளுக்குச் சொந்தக்காரர்கள் ஆவார்கள்.
பெற்றோரிடமும் ஆசிரியர்களிடமும் தங்களின் தவறுகளுக்காகத் திட்டு வாங்கும் குழந்தைகள், அவற்றைத் திருத்திக்கொள்வார்கள். தங்கள் தவறுகளினால் கிடைக்கும் தோல்விகளிலிருந்து சீக்கிரமே மீண்டு வருவார்கள்.
குழந்தைகளைத் தண்ணீர்போல வளர்க்க வேண்டும். அப்போதுதான் எந்தச் சூழ்நிலைக்கும் ஏற்றவாறு தங்களை அட்ஜஸ்ட் செய்துகொள்வார்கள். ஒருவரை அனுசரிப்பது, அவர்களைக் குற்றம் குறைகளுடன் ஏற்றுக்கொள்வது, அடுத்தவர்களுக்கு விட்டுக்கொடுப்பது, தன் தவற்றுக்கு மன்னிப்பு கேட்பது, மற்றவர்களை மன்னிப்பது, தான் கேட்பது எல்லாம் கிடைக்கும் என்ற மனப்பான்மையிலிருந்து விடுபடுவது போன்ற குணங்களை 5 வயதுக்குள்ளாகவே குழந்தைகளிடம் உண்டாக்குவது அவசியம். இளஞ்செடியாக இருக்கும்போது வேலி போடுவதுதான் சுலபம். பிள்ளைகள் மரமான பிறகு, வேலியைக் கட்டுவதால் பயனில்லை. அதனால், ‘அம்மா திட்டுவாங்க; அப்பா திட்டுவாங்க’ என்ற மனநிலையைப் பிள்ளைகளிடம் உருவாக்குங்கள். அது அவர்களுக்கு நல்லது