EdappadiPalaniswami: அமைச்சர் உதயநிதிக்கு எதிராக இபிஎஸ் வழக்கு!

edappadipalanisami

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற சனாதனம் ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டெங்கு, மலேரியா, கொரோனாவை போன்று சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என பேசியது தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி பேசும்பொருளாக மாறியது. இந்து மதத்தை புண்படுத்தியதாக பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி கூறியது சரியானது என மறுபக்கம் அவருக்கு ஆதரவும் பெருகி வந்தது.

சனாதனம் குறித்து உதயநிதி பேசியதை திரித்து பாஜகவினர் பொய் பரப்புவதாகவும் திமுகவினர் குற்றசாட்டை முன்வைக்கின்றனர். அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட மூத்த பாஜக தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்தனர். உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சுமார் 200க்கும் மேற்பட்டோர் கடிதம் எழுதியிருக்கும் நிலையில், அவர் மீது பீகார், உ.பி உள்ளிட்ட மாநிலங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சனாதனம் குறித்து உதயநிதி பேசியதற்கு அயோத்தி சாமியார் ஒருவர், உதயநிதியின் தலைக்கு விலை வைத்தார். இருப்பினும், சனாதனம் ஒழியும் வரையில் எனது குரல் ஒலித்து கொண்டே இருக்கும் என உதயநிதி தெரிவித்தார். இதையடுத்து, சனாதன சர்ச்சை விவகாரத்தில் என் மீதான வழக்குகளை சட்டப்படி எதிர்கொள்வேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாஜக அரசை விமர்சித்து அறிக்கை வெளியிட்டார். அதில் அதிமுகவையும் கடுமையாக விமர்சித்து வெளியிட்டிருந்தார்.

அதில், சனாதனம் என்றால் என்ன என்பதை வீட்டினுள் பத்திரமாக அடுக்கி வைத்திருக்கும் புத்தகங்களில் இருந்து தேடிக்கொண்டிருக்கும் எடப்பாடி அவர்களே, கோடநாடு கொலை, கொள்ளை வழக்குகளிலும், ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்க, நீங்கள் ஆட்டுத் தாடிக்குப்பின் நீண்டநாள் ஒழிந்திருக்க முடியாது. ஆடு ஒருநாள் காணாமல் போகும்போது, நீங்கள் என்ன ஆகப்போகிறீர்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்” என்று கூறியிருந்தார்.

மேலும், பாஜக கைகளில் எடப்பாடி பழனிசாமி மொத்தமாக சிக்கியுள்ளதால், ‘ஒரே நாடு ஒரே தேர்தலா… நடத்திடுவோம் எஜமான்’, ‘பாரதம்னு மாத்துறீங்களா… மாத்திடுங்க ஓனர்’ என்று மோடியின் நாடகத்தையே இங்கே அரங்கேற்றிக்கொண்டு இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி ” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், அமைச்சர் உதயநிதிக்கு எதிராக ரூ.1.10 கோடி இழப்பீடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடுத்துள்ளார். கோடநாடு கொலை வழக்குடன் தொடர்புபடுத்தி அவதூறாக அறிக்கை வெளியிட்டிருப்பதால் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் இழப்பீடு அளிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

சனாதனம் சர்ச்சையை தொடர்ந்து அமைச்சர் உதயநிதி வெளியிட்ட அறிக்கையில், தன்னை விமர்சித்ததாகவும், தன்னை பற்றி அவதூறாக பேச அமைச்சர் உதயநிதிக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பான விசாரணை அடுத்த வாரத்தில் நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்