FOOD: இனிமேல் பொரியல் செய்ய பொடி கடையில் வாங்க வேண்டாம்..! வீட்டிலேயே செய்யலாம்..!
நமது வீடுகளில் தினமும் விதவிதமான சமையல்களை செய்கிறோம். இந்த சமையலில் தினமும் நமக்கு தேவையான ஏதாவது ஒரு பொரியல் செய்வது வழக்கம். ஏதாவது குழம்பு வைத்தாலே அதனுடன் ஏதாவது ஒரு கூட்டு நாம் செய்வதுண்டு. இதை தான் வீட்டில் உள்ளவர்களும் எதிர்பார்ப்பார்கள்.
அந்த வகையில் நாம் செய்யும் கூட்டுக்கு மசாலா பொடிகளை கடையில் தான் வாங்குவது வழக்கம். தற்போது இந்த பதிவில், பொரியல் செய்வதற்கு நாம் வீட்டிலேயே மசாலா தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- மல்லி – 2 ஸ்பூன்
- கடலை பருப்பு – 2 ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு -2 ஸ்பூன்
- நிலக்கடலை – 2 ஸ்பூன்
- சீரகம் – 1 ஸ்பூன்
- வர மிளகாய் – 15
- கருவேப்பிலை – 2 கொத்து
- எள்ளு – 1 ஸ்பூன்
- பூண்டு – 5 பல்
- துருவிய தேங்காய் – 2 ஸ்பூன்
- மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
- உப்பு – அரை ஸ்பூன்
- காஷ்மீரி மிளகாய் தூள் – அரை ஸ்பூன்
செய்முறை
முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் ஒரு பாத்திரத்தில் மல்லி, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, நிலக்கடலை, சீரகம், வரமிளகாய் ஆகியவற்றை போட்டு நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் அவற்றை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அதே பாத்திரத்தில் கருவேப்பிலை, எள்ளு ஆகியவற்றை போட்டு வறுக்க வேண்டும். அதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் இடித்து வைத்துள்ள பூண்டு மற்றும் துருவிய தேங்காயை தனிதனியாக பாத்திரத்தில் போட்டு வறுத்து எடுத்து, அதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் மிக்சியில் நாம் வறுத்து வைத்துள்ள பொருட்களை போட்டு, அதனுள் காஷ்மீரி மிளகாய் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை போட்டு அரைத்து எடுத்து, அதனை ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த பொரியல் பொடியை நம் வீட்டில் செய்து, எந்த பொரியலுக்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். நம் கடைகளில் வாங்கும் பொரியல் பொடியை விட வீட்டில் செய்வது சுகாதாரமான முறையில் இருப்பதுடன், சுவையாகவும் இருக்கும்.