Kodanad Case : கோடநாடு கொலை – கொள்ளை வழக்கில் இன்னும் கால அவகாசம் தேவை.! நீதிமன்றத்தில் சிபிசிஐடி கோரிக்கை.!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் கடந்த 2017 ஏப்ரல் மாதம் 24-ஆம் தேதி காவலாளி ஓம் பகதூர், 11 பேர் கொண்ட கும்பலால் கொலை செய்யப்பட்டு, அங்கிருந்த முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
இந்த கும்பலில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் அதே ஏப்ரல் மாதம் சாலை விபத்தில் உயிரிழந்தார். காவலாளி கொலை அதன் பிறகான கனகராஜ் கொலை, முக்கிய ஆவணங்கள் கொள்ளை என மிகவும் பரபரப்பான சம்பவங்கள் நிகழ்ந்த இந்த வழக்கை தமிழக காவல்துறையினர் விசாரித்து வந்தனர்.
கோடநாடு வழக்கில் இதுவரை சுமார் 230 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இவ்வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை கடந்த 5 வருடங்களாக நீலகிரி மாவட்டம் உதகை முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து காவல்துறை விசாரித்து வந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. தற்போது சிபிசிஐடி தொடர் விசாரணையை மேற்கொண்டு வருகிறது.
இதனை அடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வரும் நிலையில், இன்று நீதிமன்றத்தில் இடைக்கால விசாரணை அறிக்கையை சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்துள்ளனர். தாக்கல் செய்யப்பட்ட விசாரணை அறிக்கையில் இதுவரை 167 சாட்சியத்திடம் விசாரணை நடத்தபட்டுள்ளது. இன்னும் பலரிடம் விசாரிக்கப்பட வேண்டியுள்ளது என்றும், செல்போன் தகவல்கள் போன்றவற்றை விசாரணை செய்ய வேண்டியுள்ளது என கூடுதல் அவகாசம் வேண்டும் என கோரப்பட்டது.
இதனை அடுத்து, உதகை முதன்மை நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையானது அக்டோபர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.