G20 Summit : போன் செய்தால் வீடு தேடி வரும் டெல்லி காவல் நிலையங்கள்… 3 நாள் மட்டுமே.!
இந்த ஆண்டு ஜி-20 உச்சி மாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்தி வருகிறது. வரும் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் ( செப்டம்பர் 9 மற்றும் 10 ) ஜி20 கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்கள் தலைநகர் டெல்லியில் நடைபெற உள்ள ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்தியா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, தென் கொரியா, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா என 20 நாட்டுத் தலைவர்கள் ஒரே இடத்தில் வர உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் டெல்லியில் பலப்படுத்தப்பட்டு, விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஏற்கனவே, அங்கு பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. 200க்கும் மேற்பட்ட ரயில்கள் அதன் பயண அட்டவணையில் மாற்றம் கண்டுள்ளன. அதே போல விமான சேவைகளும் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு உட்படடுத்தப்பட்டுள்ளன.
ஏற்கனவே, கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலர்களுக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அதே போல் காவல் நிலையங்களுக்கும் புதிய வழிமுறை இன்று முதல் 3 நாட்களுக்கு செயல்படுத்தப்பட உள்ளது. அதாவது, வீடு தேடி வரும் காவல் நிலையம். டெல்லி மக்களுக்கு ஏதேனும் பிரச்சனை என காவல் உதவி தேவைப்பட்டால் ஒரு கால் செய்தால் போதும். உடனடியாக 5 பேர் கொண்ட நடமாடும் காவல் நிலையம் அவர்கள் வீடு தேடி வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடமாடும் காவல் நிலையம் இன்று (செப்டம்பர் 8) , நாளை மற்றும் நாளை மறுநாள் (செப்டம்பர் 8, 10) ஆகிய 3 நாட்கள் செயல்படும். இதில் ஒரு ஓட்டுநர் உட்பட 5 கவலர்கள் இருப்பர் என கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் அத்தியாவசிய தேவைகளின்றி வேறு எதற்கும் வெளியில் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.