EV Scooter: ஒருமுறை சார்ஜ் செய்தால் 85 கிமீ வரை போலாம்..! அது என்ன எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.?
கடந்த சில மாதங்களாக இந்திய சந்தையில் எலக்ட்ரிக் பைக்குகளின் அறிமுகம் மற்றும் விற்பனையானது அதிகரித்துவருகிறது. ஏனென்றால், பெட்ரோல் மற்றும் அதன்மூலம் இயங்கும் பைக்குகளின் விலையானது உயர்ந்து வருவதால் மக்கள் எலெக்ட்ரிக் பைக்குகளுக்கு மாறி வருகின்றனர். அதனால் எலக்ட்ரிக் பைக்குகளின் தேவையானது அதிகரித்து வருகிறது.
அரசாங்கமும் மின்சார வாகனங்களின் உற்பத்தியை ஊக்குவித்து வருவதால், அனைத்து மோட்டார் வாகன நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு சிறந்த எலக்ட்ரிக் பைக்குகளை தயாரித்து வருகின்றன. அந்த வகையில், மின்சார இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான பிகாஸ் (BGAUSS), தனது மின்சார ஸ்கூட்டர் சி12ஐ இஎக்ஸ்-ஐ (C12i EX) இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
சி12ஐ இஎக்ஸ் பேட்டரி:
இந்நிறுவனம் 2kWh சக்தி கொண்ட லித்தியம் அயன் பேட்டரியை இந்த ஸ்கூட்டரில் பயன்படுத்தியுள்ளது. இந்த பேட்டரிக்குள் நீர் புகாவண்ணம் பேட்டரி பேக் ஆனது IP67 ரேட்டிங்கை கொண்டுள்ளது. இதனால் மழைநீர் மற்றும் சாலையில் இருக்கும் நீர், பேட்டரிக்கு தீங்கு விளைவிப்பதில்லை.
சி12ஐ இஎக்ஸ் மோட்டார் மற்றும் வேகம்:
இந்த பேட்டரி யானது 3.3 bhp மற்றும் 10.7 kgm முறுக்குவிசை உற்பத்தி செய்யும் ஹப்-மவுண்டட் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மணிக்கு 60 கிமீ வேகத்தில் இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் குறித்து அந்நிறுவனம் அளித்துள்ள தகவலின்படி, பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய சுமார் 3 மணிநேரம் ஆகும். ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 85 கிலோமீட்டர் வரை செல்லும். இது நகர்ப்புற பகுதிகளில் சவாரி செய்வதற்கு ஏற்றது.
சி12ஐ இஎக்ஸ் அம்சம் மற்றும் விலை:
இது ஒரு வட்ட ஹெட்லைட் வடிவமைப்புடன் கூடிய, டூயல்-டோன் பெயிண்ட் ஸ்கீமைப் பெறுகிறது. இது ஆறு வெவ்வேறு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை நிறுவனத்தின் இணையதளத்தில் இருந்து முன்பதிவு செய்யலாம். இந்த புதிய இ-ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.99,999 ஆகும். இது ஒரு பாட்டில் ஹோல்டர்,லக்கேஜ் ஹூக், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், எல்சிடி கன்சோல், மற்றும் இரண்டு ரைடிங் மோடுகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.