#BREAKING: செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பது சரியல்ல – ஐகோர்ட் தீர்ப்பு
சட்டவிரோத பண பரிவர்த்தனை தடை சட்டத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் தற்போது நீதிமன்ற காவலில் புழல் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். செந்தில் பாலாஜி கைதை தொடர்ந்து இரு துறைகள் வெவ்வேறு அமைச்சர்களுக்கு மாற்றி கொடுக்கப்பட்டன. இருப்பினும், செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என தமிழக அரசு அறிவித்து இருந்தது.
அதுமட்டுமில்லாமல், செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்து ஆளுநர் உத்தரவிட்டார். பின்னர் இந்த உத்தரவை நிறுத்தி வைப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு விசாரணையானது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் சஞ்சய் கங்காபூர்வாலா மற்றும் ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. எனவே, செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதை எதிர்த்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், செந்தில் பாலாஜியை அமைச்சராவாக வைத்திருப்பது தார்மீக அடிப்படையில் சரியானதல்ல என துறை இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிக்க வேண்டுமா என்பதை முதலமைச்சர் தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்பதால் எந்த பலனும் இல்லை எனவும் கூறி செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதை எதிர்த்த வழக்குகளை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம். அதிமுக முன்னாள் எம்பி ஜெயவர்தன் உள்ளிட்டோரின் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது. இலாகா இல்லாத அமைச்சராக நியமித்ததையும், பதவி நீக்க உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்ததையும் எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டது.