கரூர் அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இளம்பெண்ணை எரித்துக் கொலை!
காதல் திருமணம் செய்து கொள்ளவிருந்த அண்ணன் மகளை கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சித்தப்பா பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குளித்தலையை அடுத்த சுப்ரமணியபுரத்தைச் சேர்ந்த விவசாயி வெங்கடாச்சலம் என்பவரின் மகள் நந்தினி. தாயை இழந்த இவர் திண்டுக்கல் மாவட்டம் காக்காதோப்பு கிராமத்தில் உள்ள சித்தப்பா ராஜூ விட்டில் தங்கி, அருகே உள்ள பஞ்சு மில்லில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது வெள்ளமரத்துப்பட்டி கிராமத்தில் உள்ள தமது உறவினரான ரமேஷ் என்பவருடன் நந்தினிக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இவர்களது காதல் விவகாரம், சித்தப்பா ராஜூவுக்கு தெரிய வரவே அவர் கண்டித்துள்ளார்.
இதையடுத்து தந்தை வெங்கடாசலத்திடம் ரமேஷ் உடனான காதல் குறித்து கூறிய நந்தினி திருமணத்திற்கு சம்மதம் பெற்றுள்ளார். இந்த நிலையில் சுப்ரமணியபுரத்தில் நடந்த கோவில் திருவிழாவுக்கு நந்தினியை அழைத்துக் கொண்டு ராஜூவும், அவரது மனைவி சரசுவும் சென்றுள்ளனர்.
காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நந்தினியிடமும் அவரது தந்தை வெங்கடாச்சலத்திடமும் சித்தப்பா ராஜூ சண்டை போட்டுள்ளார். இந்நிலையில், ரமேஷ் வீட்டில் இருந்து பெண் கேட்டு வர முடிவு செய்யப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜூ புதன்கிழமை மாலை வீட்டிற்கு அருகே உள்ள விளை நிலத்துக்கு நந்தினியை அழைத்துச் சென்று பெட்ரோல் ஊற்றி தீவைத்துள்ளார்.
இதில் உடல் கருகிய இளம்பெண் நந்தினி, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராஜூவை குளித்தலை போலீசார் கைது செய்தனர். தீக்காயம் அடைந்த ராஜூவுக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.