Puducherry Traffic Rules : புதுச்சேரிக்குள் 30 கிமீ வேகத்தை தாண்ட கூடாது.. மீறினால் கடும் நடவடிக்கை.! 

Puducherry Traffic Rules

புதுச்சேரி என்பது தனி மாநிலம் என்பதை தாண்டி, அதுவும் தமிழகத்தில் ஒரு மாவட்டம் போலவே செயல்பட்டு வருகிறது.  சென்னை, விழுப்புரம், கடலூர் மாவட்ட மக்கள் அதிகம் பயணிக்கும் பகுதியாகவும்  புதுச்சேரி உள்ளது. இதனால், மற்ற மாவட்ட மக்கள், புதுச்சேரி மக்கள் என புதுச்சேரி எப்போதும் போக்குவரத்து நெரிசல் கொண்ட ஓர் பகுதியாகவே உள்ளது.

குறிப்பாக, சென்னை, விழுப்புரம், கடலூர், மற்றும் கிராமப் பகுதிகளில் இருந்து புதுச்சேரிக்குள் வருவோர் அதிகளவில் பயன்படுத்தும் இந்திரா காந்தி சிலை சதுக்கம், ராஜீவ் காந்தி சிலை சதுக்கம் பகுதிகளில் அதிக போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.

நகரின் முக்கிய இடமான ராஜீவ் காந்தி சிலை சதுக்கம் பகுதியில் ஐந்து முக்கியச் சாலைகள் சந்திக்கின்றன. லட்சகணக்கான வாகனங்கள் இப்பகுதியை கடக்கின்றன. காலை, மாலை நேரங்களில் இப்பகுதியை உள்ளூர்வாசிகள் கடக்க வெகுநேரம் ஆகிறது. போக்குவரத்து போலீஸார் இந்த நெருக்கடியை சமாளிக்க திணறி வருகின்றனர்.

சென்னை புறவழிச்சாலை, கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் இருந்து ராஜீவ் காந்தி சதுக்கத்தில் இணைகின்றன. இந்த சதுக்கத்தை ஒட்டியே ஜிப்மர் மருத்துவமனை, கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி, ஆட்சியர் அலுவலகம், தட்டாஞ்சாவடி ஒழுங்கு முறை விற்பனைக் கூடம், குழந்தைகள் நல மருத்துவமனை என பல முக்கிய இடங்கள் உள்ளன. மேலும், சுற்றுலா பயணிகளின் கூட்டத்தால் வார விடுமுறை நாட்களில் இப்பகுதிகள் அதிக அளவில் போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்டுகிறது.

அதிலும் குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள் இந்த நெரிசல் மிகுந்த சாலைகளை கடக்கையில் அதிவேகத்துடன் செல்ல முற்படுகின்றனர். இதனால் அவ்வப்போது பெரும் விபத்துக்களும் ஏற்படுகின்றன. இந்த போக்குவரத்து நெரிசல், விபத்துகளை குறைக்க புதுச்சேரி காவல்துறையினர் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.

இதனை கட்டுப்படுத்த தற்போது புதுச்சேரி போக்குவரத்து காவல்துறையினர் புதிய வேக கட்டுப்பாட்டை அமல்படுத்தியுள்ளனர். புதுச்சேரி நகருக்குள் 20 முதல் 30 கிமீ வேகத்திற்கு மேல் வாகனங்களை யாரும் இயக்க கூடாது என்றும், மீறினால் கடும் நடவடிக்கை, அபராதம் விதிக்கப்படும் என்றும் போக்குவரத்து விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளனர்.

ஏற்கனவே, கிழக்கு கடற்கரைச் சாலை தொடங்கி ராஜீவ் காந்தி சிலை, இந்திரா காந்தி சிலை உள்ள சதுக்கங்களின் வழியே மேம்பாலங்கள் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. மொத்தம் ரூ. 440 கோடியில் மேம்பாலம் அமைக்க புதுச்சேரி மாநில அரசால் முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்