கர்நாடக அரசின் செயல் நீதிக்கு புறம்பானது – டிடிவி தினகரன் எச்சரிக்கை

TTV DHINAKARAN

காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவை மீறி தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரை வழங்க மறுக்கும் கர்நாடக அரசின் செயல் நீதிக்கு புறம்பானது, கடும் கண்டனத்திற்குரியது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், தமிழ்நாட்டிற்கு தினம் தோறும் 5 ஆயிரம் கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு ஏற்க மறுத்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

மேட்டூர் அணையின் நீர் மட்டம் சரிந்து வருவதால் காவிரி நீரை நம்பி குறுவை சாகுபடியை தொடங்கிய விவசாயிகள் தற்போது பயிர்களை காப்பாற்ற முடியுமா? என்ற சந்தேகத்தோடு தவித்து வருகின்றனர். குறுவை சாகுபடிக்கு உரிய நேரத்தில் மேட்டூர் அணையை திறந்துவிட்டோம் என மார்தட்டி பெருமை பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கூட்டணியில் அங்கம் வகிக்கும் மாநிலத்தில் இருந்து கூட உரிய நீரை பெற முடியாமல் தமிழக விவசாயிகள் கண்ணீர் வடிக்க காரணமாகியுள்ளார்.

கர்நாடக அரசுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் போது மூத்த வழக்கறிஞர்களை கொண்டு வலுவான வாதங்களை முன்வைத்து தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் தீர்ப்பை பெற வேண்டும் என தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.

மேலும், தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கர்நாடக காங்கிரஸ் முதல்வரை, நேரில் சந்தித்து காவிரி பிரச்னைக்கு தமிழக முதலமைச்சர் உரிய தீர்வு காண வேண்டும். இல்லையெனில் தமிழகத்தின் ஒட்டுமொத்த விவசாயிகளை திரட்டி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போராடவும் தயங்காது எனவும் எச்சரிக்கிறேன் என்றுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்