இரண்டு போட்டிக்கு அப்புறம் மட்டும் சரியாகிவிடுமா? கே.எல்.ராகுலின் உடற்தகுதி குறித்து முகமது கைஃப்!
ஆசியை கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் இன்று தொங்கப்படவுள்ளது. இன்று நடைபெறவிருக்கும் முதல் போட்டியில் உலக நம்பர் 1 ஒருநாள் அணியான பாகிஸ்தான், நேபாளத்தை எதிர்கொள்கிறது. இந்திய கிரிக்கெட் அணி வரும் செப்டம்பர் மாதம் 2-ஆம் ஆம் தேதி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது.
இதனையடுத்து, அந்த போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் பெங்களூர் பயிற்சி முகாமில் பயிற்சி எடுத்து வருகிறார்கள். இதற்கிடையில், காயத்தில் இருந்து மீண்டு நீண்ட மாதங்களுக்கு பிறகு அணிக்கு திரும்பியுள்ள கே.எல்.ராகுல் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடமாட்டார் என பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் இரண்டு போட்டிக்கு அப்புறம் மட்டும் கே.எல்.ராகுல் முழு உடற்தகுதியுடன் அணிக்கு திரும்பிவிடுவாரோ என சந்தேகத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக ஸ்டார் ஸ்போட்ஸ்க்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில் கே.எல்.ராகுல் ஃபிட்னஸ் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
எந்த உத்தரவாதமும் இல்லை
இது குறித்து பேசிய முகமது கைஃப் ” கே.எல். ராகுல் ஆசிய கோப்பை 2023 தொடரில் முழு உடற்தகுதி இல்லாத காரணத்தால் இரண்டு போட்டிகளில் விளையாடமாட்டார். அந்த இரண்டு போட்டிகளுக்கு பிறகு அவர் ஃபிட்டாக இருப்பார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இந்திய ரசிகர்களுக்கு இந்த செய்தி அதிர்ச்சியை கொடுக்கலாம் ஆனால், அது தான் என்னைப்பொறுத்தவரை உண்மை.
கே.எல்.ராகுல் இல்லாதது கஷ்டம்
கே.எல். ராகுல் 5-வது இடத்தில் மிக சிறப்பாக விளையாடுகிறார். அதைப்போல ஓப்பனிங் இறங்கினால் கூட அருமையாக விளையாடுகிறார். நான் எதை வைத்து சொல்கிறேன் என்றால் இதற்கு முன்பு அவர் போட்டிகளில் விளையாடிய அவரது புள்ளிவிவரங்கள் மிகவும் நன்றாக இருக்கிறது. அவர் மாதிரி ஒரு வீரர் அணிக்கு விளையாடவில்லை என்றால் அது சற்று கஷ்டம் தான்” எனவும் முகமது கைஃப் கூறியுள்ளார்.
இஷான் கிஷன் சரியாக இருக்கமாட்டார்
“கே.எல்.ராகுல் இன்று விளையாடவில்லை என்றால் அவருக்கு பதிலாக , அணியில் இஷான் கிஷன் இடம்பெறுவார் என்று நான் நினைக்கிறேன். ஆனால், இஷான் கிஷனை விட, ராகுலுக்கு கியர்களை மாற்றவும், பெரிய ஷாட்களை ஆடவும், இன்னிங்ஸை நிலைப்படுத்தவும் தெரியும். எனவே, என்னைப்பொறுத்தவரை இஷான் கிஷானுடன் விளையாடினாலும் கே.எல்.ராகுலுக்கு பதில் மாற்று வீரராக அவர் இருக்கமாட்டார்” என கூறியுள்ளார்.
மேலும், இதுவரை 54 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள கே.எல்.ராகுல் 52 இன்னிங்ஸில் 1986 ரன்கள் குவித்துள்ளார். அதைப்போல இஷான் கிஷன் 17 போட்டிகளில் விளையாடி 16 இன்னிங்ஸில் 694 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.