செந்தில் பாலாஜியின் மனுவை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும் – நீதிபதி அல்லி உத்தரவு
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில், ஜாமீன் கோரி அவரது சார்பில் மனுத் தாக்கல் செய்யபட்டது. இதனை அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதி அல்லி முன்பு செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ முறையிட்டிருந்தார்.
அதாவது, நேற்று முன்தினம் செந்தில் பாலாஜிக்கு செப்-15 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது, அமலாக்கத்துறை தாக்கல் செய்த 3000 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிடம் வழங்கப்பட்டுள்ளதோடு, ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாடலாம் எனவும் சிறப்பு நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
ஜாமீன் மனுவை விசாரிக்க அதிகார வரம்பு இல்லை என சென்னை சிறப்பு நீதிமன்றம் நேற்று கூறியிருந்தது. இதனைத்தொடர்ந்து நேற்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும் என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.
ஜாமீன் கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி முறையீடு செய்யப்பட்ட நிலையில், நீதிபதி அல்லி இவ்வாறு தெரிவித்துள்ளார். செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை விசாரிக்க தமக்கு அதிகாரம் இல்லை என சிறப்பு நீதிமன்ற தெரிவித்திருந்த நிலையில், ஜாமீன் மனுவை எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றமே ஜாமீன் மனுவை விசாரிக்கும் என நீதிபதி அல்லி அறிவித்துள்ளார்.