#BREAKING : தமிழகத்திற்கு காவிரி நீர் வழங்க இயலாது..! கைவிரித்த கர்நாடகா அரசு..!
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 23வது கூட்டம் டெல்லியில் தொடங்கியது. தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறை செயலாள் சந்தீப் சக்சேனா மற்றும் காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழ்நாடு, கர்நாடக அரசு முன்வைத்த கோரிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
புதுச்சேரி அரசு சார்பில் தலைமை பொதுப்பணித்துறை பொறியாளர் பழனியப்பன் காணொளி காட்சி வாயிலாக பங்கேற்றார். காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் புதுச்சேரி, கேரளா, கர்நாடக மாநில அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த அவசர மனு மீது காவிரி மேலாண்மை ஆணையம் முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் ஆணையிட்டிருந்த நிலையில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், தமிழகத்திற்கு காவிரி நீர் வழங்க இயலாது என கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது.
முக்கிய அணைகளில் போதுமான நீர் இல்லாததால் தமிழகத்திற்கு நீர் திறப்பது இயலாத செயல். மழைப்பொழிவுக்கான வாய்ப்பு குறைவாக இருப்பதால் தமிழ்நாடு கேட்கும் அளவுக்கு தண்ணீர் தர இயலாது. தமிழ்நாடு கேட்கும் நீரை கொடுத்தால் பெரும் சிக்கல் ஏற்படும் என்றும், கர்நாடகத்தின் நான்கு முக்கிய அணைகளிலும் போதுமான அளவு தண்ணீர் இல்லை, 47 சதவீதம் அளவுக்கு மட்டுமே நீர் இருப்பு இருப்பதால் குடிநீர் தேவைக்காக மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் கர்நாடக அரசு விளக்கம் அளித்துள்ளது.