பெண்ணின் மூளைக்குள் நுழைந்த 8 சென்டிமீட்டர் நீளமுள்ள புழு..! அதிர்ச்சியில் மருத்துவர்கள்..!
ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு நியூ சவுத் வேல்ஸைச் சேர்ந்த 64 வயதான பெண் ஒருவர், கடந்த ஜனவரி 2021-ஆம் ஆண்டு, வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டு, தொடர்ந்து வறட்டு இருமல், காய்ச்சல் மற்றும் இரவு நேரத்தில் வியர்வை போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டார்.
இவர் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், குடலில் இருந்து கல்லீரல் மற்றும் நுரையீரல் போன்ற பிற உறுப்புகளுக்குள் வட்டப்புழு லார்வாக்கள் இடம்பெயர்வதன் காரணமாக இந்த பிரச்சனைகள் காணப்படலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அப்பெண், 2022-ஆம் ஆண்டு தனது நினைவாற்றல் மற்றும் சிந்தனைச் செயலாக்கத்தில் நுட்பமான மாற்றங்களை சந்திக்க நேரிட்டது. அதே நேரம், நோயாளி மறதி மற்றும் மனச்சோர்வை அனுபவிப்பதாக மருத்துவர்கள் கூறினர். தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், மருத்துவர்கள் அப்பெண்ணுக்கு MRI ஸ்கேன் எடுத்தனர்.
அந்த ஸ்கெனில், மூளையின் வலது முன் மடலில் ஒரு வித்தியாசமான திசு காயத்தை ஏற்படுத்தியதை காட்டியது. இதன் தொடர்ச்சியாக கான்பெர்ரா மருத்துவமனையில் உள்ள ஒரு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் அவரது மூலையில் எட்டு சென்டிமீட்டர் ஆநீளமுள்ள வட்டப் புழு இருப்பதாகி கண்டுபிடித்தனர். பின் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் இந்த புழுவை உயிருடன் அகற்றினர். நுரையீரல் மற்றும் கல்லீரல் உள்ளிட்ட பெண்ணின் உடலில் உள்ள மற்ற உறுப்புகளிலும் புழுவின் லார்வாக்கள் இருப்பதாக சந்தேகிக்கின்றனர்.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், ‘ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு நியூ சவுத் வேல்ஸைச் சேர்ந்த பெண், அவர் வசித்த இடத்திற்கு அருகிலுள்ள ஒரு ஏரியின் அருகே, வாரிகல் கிரீன்ஸ் எனப்படும் ஒருவகை கீரையை சேகரித்து சமைத்துள்ளார். அந்த கீரையில் இருந்த அந்த புழுவின் முட்டைகள் மூலம் இந்த புழு அவரது மூளைக்குள் நுழைந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
மேலும், நோயாளியின் மூளையில் இருந்து அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுக்கப்பட்டபோது அந்த புழு உயிருடன் நெளிந்து கொண்டு இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இப்படிப்பட்ட பிரச்சனை உலகில் முதன்முதலில் இந்த பெண்ணுக்கு தான் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.