தமிழ்நாட்டுக்கு 24,000 கன அடி நீர் திறக்க வேண்டும் – அமைச்சர் துரைமுருகன் பேட்டி
தமிழ்நாட்டுக்கு 24,000 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என இன்று நடக்கும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் வலியுறுத்தப்படும் என அமைச்சர் துரைமுருகன் பேட்டியளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 5,000 கன அடி தண்ணீர் திறப்பது போதாது. தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 24,000 கன அடி நீர் கிடைத்தால் தான் நன்றாக இருக்கும். இது இன்று டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் வலியுறுத்தப்படும் என்றார்.
மேலும், தண்ணீர் குறைந்தால் விகிதாச்சார முறையில் தண்ணீரை பங்கிட வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையம் கடமையை சரியாக நிறைவேற்றவில்லை எனவும் புகார் தெரிவித்தார். காவிரியில் நீர் குறைந்தால் எப்படி பங்கிடுவது என காவிரி மேலாண்மை ஆணையம் சரியாக வகுக்கவில்லை. காவிரி மேலாண்மை ஆணையம் மெத்தனமாக உள்ளது. தமிழ்நாட்டுக்கு 49 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு கொடுக்க வேண்டும். எனவே, காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழகத்தின் கோரிக்கையை வலுவாக எடுத்துரைக்கப்படும் எனவும் கூறினார்.