சரியான திட்டமிடல் இல்லை! இந்தாண்டு இறுதிக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு – அமைச்சர் சேகர்பாபு
இந்தாண்டு இறுதியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வரும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறந்தபின் எவ்வித அசெளகரியம் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மழைநீர் தேங்குவது, போக்குவரத்து நெரிசல், மக்களுக்கான அடிப்படை வசதிகள் போன்ற விஷயங்கள் குறித்து சரியான திட்டமிடல் இல்லாமல், கடந்த ஆட்சி காலத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை கட்டமைத்துள்ளனர்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை தனியாருக்கு டெண்டர் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், புதிய மழைநீர் வடிகால் அமைப்பதற்கு ரூ.17 கோடி மதிப்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது எனவும் கூறினார். மேலும், தேசிய நெடுஞ்சாலை என்பதால் அதை அமைக்க மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டால் மாற்றுப்பாதையில் செல்வதற்கு ஏதுவாக, வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் முன் அனுமதி பெற்று சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே, இந்தாண்டு இறுதிக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வரும் என்றார்.