மதுரை ரயில் தீ விபத்து : தனியார் டிராவல்ஸ் உரிமையாளரை கைது செய்ய தென்னக ரயில்வே அதிரடி உத்தரவு.!
உத்திரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து ஆன்மீக பயணமாக தென் இந்தியா நோக்கி சிறப்பு ரயில் மூலம் 64 பேர் பயணித்துள்ளனர். இவர்கள் கடந்த 17-ஆம் தேதி தமிழகம் வந்துள்ளனர். இன்று அதிகாலை மதுரை வந்தடைந்துள்ளனர். மதுரை , ராமேஸ்வரம் பகுதியில் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தனர்.
இந்நிலையில், மதுரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா விரைவு ரயிலில் தேநீர் தயார் செய்வதற்காக சிலிண்டர் பயன்படுத்தப்பட்டபோது திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில், இதுவரை 5 ஆண்கள் 4 பெண்கள் என 9 பேர் உயிரிழந்துள்ளனர். 6 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ரயில் விபத்துக்கு காரணம் , ரயிலில் சட்ட விரோதமாக சிலிண்டர் போன்ற தீ பற்ற கூடிய பொருட்களை எடுத்து சென்றது தான் ரயில்வே அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து, இந்த ஆன்மீக சுற்றலாவை ஏற்பாடு செய்த உத்தரப் பிரதேச மாநிலம் சீதாப்பூரைச் சேர்ந்த பாசின் டிராவல்ஸ் எனும் தனியார் நிறுவனம் மீது தென்னக ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் . மேலும் அந்த தனியார் டிராவல்ஸ் நிறுவன உரிமையாளரை கைது செய்யவும் லக்னோ போலீசாருக்கு தென்னக ரயில்வே உத்தரவு பிறப்பித்துள்ளது.