மதுரை ரயில் தீ விபத்து : 64 பேரில் 39 பேர் நலம்.! 9 பேர் உயிரிழப்பு.! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.!
உத்திர பிரதேசத்தில் இருந்து சிறப்பு ரயில் மூலம் ஆன்மீக சுற்றுலா வந்தவர்கள், தமிழகத்தில் உள்ள ஆன்மீக தளங்களை சுற்றி பார்க்க தமிழகம் வந்தனர். அப்போது மதுரையில் நின்று கொண்டு இருந்த சிறப்பு ரயிலில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
காலை தேநீர் தயாரிப்பதற்காக சிலிண்டர் பற்றவைத்த போது இந்த விபத்து நேர்ந்ததாக முதற்கட்ட ரயில்வேத்துறை விசரணையில் தெரியவந்துள்ளளது. சம்பவ இடத்திற்கு காவல்துறை அதிகாரிகள், ரயில்வே துறை அதிகாரிகள், அமைச்சர் மூர்த்தி , மாவட்ட ஆட்சியர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
தற்போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேரில் ஆய்வு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களின் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், உத்திர பிரதேசத்தில் இருந்து 64 பேர் தமிழகத்திற்கு ஆன்மீக யாத்திரைக்கு வந்துள்ளனர். அவர்கள் இம்மாதம் 30ஆம் தேதி யாத்திரையை முடித்துக்கொண்டு ஊர் திரும்ப திட்டமிட்டு இருந்தனர்.
நேற்று திருப்பதி சென்றுவிட்டு, அடுத்து மதுரை மற்றும் ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளுக்கு செல்ல திட்டமிட்டு மதுரை வந்தடைந்துள்ளனர். இன்று அதிகாலை 3.45 மணிக்கு மதுரை வந்தடைந்த சிறப்பு ரயிலில் அதிகாலை 5.45 மணிக்கு தேநீர் தயாரிப்பதற்கு சிலிண்டர் பற்ற வைத்துள்ளனர். அப்போது சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ள்ளது.
தீ விபத்து சம்பவம் அறிந்தவுடன் உடனடியாக மதுரை மாவட்ட நிர்வாகத்தினர், அமைச்சர் மூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். ரயிலில் பயணித்த 64 பேரில் 39 பேர் நலமுடன் உள்ளனர். அவர்கள் ரயில் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
6 பேர் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 4 பெண்கள் , 5 ஆண்கள் உட்பட 9 பேர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். அவர்கள் அனைவரும் உத்திர பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள்.
சம்பவம் நிகழ்ந்த உடன் தமிழக முதல்வரின் உத்தரவின் பெயரில் அமைச்சர் மூர்த்தி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளார். நான் அப்போது ராமநாதபுரத்தில் 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை திறந்து வைத்து விட்டு செய்தி அறிந்து இங்கே வந்துள்ளேன். சிகிச்சை பெற்று வருவோருக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறோம். 5 குழுக்கள் அமைத்து இறந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.