இதுவே நான் எதிர்பார்த்த மாற்றம்.. ஆட்சியர்கள் உடனான ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.!
நாகை, திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கு 4 நாள் பயணமாக முதலமைச்சர் முக ஸ்டாலின் கடந்த இரு தினங்களுக்கு முன்பு புறப்பட்டிருந்தார். அதன்படி, நேற்று திருக்குவளையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பயின்ற பள்ளியில் காலை சிற்றுண்டி விரிவாக்க திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
இந்த நிலையில், நாகையில் இன்று 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் ஆகிய மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இந்த ஆலோசனையானது நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கேஎன் நேரு, ரகுபதி, மெய்யநாதன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் முதலமைச்சருடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். மேலும், உள்துறை செயலர் அமுதா, டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் ஏடிஜிபி அருண் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனை கூட்டம் முடிந்து ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னதாக வேலூரில் இதே போல துறைரீதியிலான செயலாளர்கள் உடன் ஆலோசனை நடத்தி நான் எந்த கேள்விகளை கெட்டிடிருந்தேனோ அதனை நீங்கள் கேட்டு , அதற்கான உரிய நடவடிக்கை எடுத்துள்ளீர்கள். இதுவே நான் எதிர்பார்க்கும் மாற்றம். இதுவே இந்த திட்டத்தின் வெற்றி என கூறினார்,
இந்த மாவட்டங்களில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம். கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் , அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், முதலமைச்சர் கிராம சாலை மேம்பாட்டு திட்டம் , மக்களை தேடி மருத்துவம் ஆகிய திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்பட வேண்டும். அதனை ஆட்சியர்கள் கண்காணிக்க வேண்டும்.
100 நாள் வேலைத்திட்டத்தின் சராசரி வேலைநாட்களை உயர்த்தவேண்டும். கடந்த காலங்களை ஒப்பிடுகையில் வேளாண் சாகுபடி என்பது குறைந்து வருகிறது. எந்தெந்த பகுதிகளில் வேளாண் சாகுபடி குறைந்து வருகிறதோ அதனை கண்டறிந்து அந்த பகுதிகளில் வேளாண் சாகுபடியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தென்னை மரங்களின் எண்ணிக்கையும் சமீபகாலமாக குறைந்து வருவது வருத்தமளிக்கிறது. அத்தனையும் ஆட்சியர்கள் நிவர்த்தி செய்ய வேண்டும். வேளாண் உற்பத்தியை மட்டுமல்லாது, விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவும் ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேளாண் துறை சார்ந்த தொழில்களை மட்டும் நம்பி இருக்காமல், தொழில் சார்ந்த வளர்ச்சி திட்டங்களையும் ஆட்சியர்கள் அந்தந்த மாவட்டங்களில் செயல்படுத்த வேண்டும். தங்கள் மாவட்டங்களுக்கு என தனிப்பட்ட திட்டங்களை கண்டறிந்து அதனை அரசுக்கு எடுத்துரைக்க வேண்டும்.
பாட்டா மாறுதல் தொடர்பான மனுக்களை முன்னுரிமை அடிப்படையில் விரைவாக முடித்து தரவேண்டும். அரசு சான்றிதழ் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த மாவட்டங்களில் ஊட்டச்சத்து குறைபாடு மக்கள் மத்தியில் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதனை குறைக்க ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வடமேற்கு பருவமழை வருவதற்கு முன்னர், திருவாரூர் , மயிலாடுதுறை மாவட்டங்களில் நகர்ப்புற சாலைகளை மேம்படுத்த வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சியில் மயிலாடுதுறை மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது அதனை அந்த மாவட்ட ஆட்சியர் கண்டறிந்து அடுத்த வருடம் இதே போல கடைசி இடம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். என நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் ஆகிய 4 மாவட்ட ஆட்சியர்களுடன் நாகையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.