மதுரை ரயில் விபத்து : நடந்தது என்ன..? விபத்துக்கு காரணம் இதுதான்..!
உத்திரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து தென்னிந்தியாவில் சாமி தரிசனம் செய்வதற்காக 60-க்கும் மேற்பட்டோர் ஒரு பெட்டியில் பயணித்துள்ளனர். இவர்கள் கடந்த 17-ஆம் தேதி யாத்திரையாக தமிழகம் வந்துள்ளனர். நேற்று நாகர்கோவிலை பத்மநாதர் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டு மதுரையை வந்தடைந்துள்ளார்.
இந்த நிலையில், இந்த ரயில் பெட்டியானது மீண்டும் சுற்றுலா செல்வதற்காக வேறொரு ரயிலில் இணைக்கப்படுவதற்காக மதுரை ரயில் நிலையத்தில் இருந்து 1 கி.மீ தூரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இவர்கள் ராமேஸ்வரம் செல்லவிருந்ததாக கூறப்படுகிறது.
மதுரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா விரைவு ரயிலில் தேநீர் தயார் செய்வதற்காக சிலிண்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது. அப்போது திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே அறிக்கை
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த தீ விபத்தானது அதிகாலை 5.15 மணிக்கு ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் காலை 5:45 மணிக்கு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீ விபத்தில் ஆன்மீக பயணம் மேற்கொண்ட பயணிகள் அலறியடித்தபடி ரயில் இருந்து கீழே இறங்கினர்.
இந்த விபத்தில் ஒன்பது பேர் தீயில் சிக்கி உயிரிழந்தனர். இரு பெட்டிகளில் பற்றிய காலை 7:15 மணிக்கு கட்டுக்குள் வந்துள்ளது. தீ விபத்தில் காயமடைந்த ஆறு பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சென்னை வழியே புனலூரில் இருந்து மதுரை வந்த ரயிலில் இணைக்கப்பட்டிருந்த இரண்டு பெட்டிகள் தனியாக பிரிக்கப்பட்டது.
மதுரை ரயில் நிலையத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இரண்டு பெட்டிகளும் நிறுத்தப்பட்டிருந்தன. நிறுத்தப்பட்டிருந்த ரயில் பெட்டியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ரயில் பெட்டியில் இருந்து தூக்கி வீசப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் உணவுப் பொருட்கள் மற்றும் சமையல் பாத்திரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மதுரை ரயில் பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டதற்கு சட்ட விரோதமாக கொண்டு செல்லப்பட்ட சிலிண்டரே காரணம். சட்டவிரோத சிலிண்டரில் பயணிகள் சமைக்க முயன்றபோது தீ விபத்து ஏற்பட்டதாக தெற்கு ரயில்வே அறிக்கை வெளியிட்டுள்ளது. நாளை அனந்தபுரி ரயில் பெட்டியில் இணைக்கப்பட்டு சென்னை வழியாக லக்னோ செல்ல திட்டமிட்ட நிலையில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், உயிரிழந்தவர்கள் மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிவாரணம் அறிவிப்பு
ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தெற்கு ரயில்வே ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகள் ஆய்வு
சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆய்வு மேற்கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். தெற்கு ரயில்வேயின் கூடுதல் மேலாளர் கவுசல் கோசல், ரயில்வே ஐஜி சந்தோஷ் சந்திரன் ஆகியோர் மதுரை விரைகின்றனர். இந்த விபத்தில் இதுவரை 5 ஆண்கள் 3 பெண்கள் அடையாளம் தெரியாத ஒருவர் என 9 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.