மதுரை மாநாடு – புளியோதரை கதையாக போய்க்கொண்டு இருக்கிறது… ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம்.!
கடந்தாண்டு எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்த அதிமுக பொதுக்குழுவில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 4 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். அந்த வழக்கின் தீர்ப்பில், இன்று ஓபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பு குறித்து பெரியகுளத்தில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், அதிமுக இயக்கமானது தொண்டர்களுக்காக தொடங்கப்பட்ட இயக்கம். நீதிமன்ற தீர்ப்பு, மேல்முறையீடு குறித்து அவர்களை கலந்தாலோசித்து முடிவு எடுப்போம் தெரிவித்தார் .
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு பற்றி பேசுகையில், நடந்த உண்மை பற்றி சம்பந்தபட்டவர்கள் வெளிப்படையாக செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார்கள் . அதனை அரசு கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டார்.
மதுரை மாநாடு பற்றி ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், மதுரை மாநாடு பற்றி கூறுவதற்கு ஒன்றுமில்லை. அது புளியோதரை கதையாக போய்க்கொண்டு இருக்கிறது என மதுரை அதிமுக பொதுக்கூட்டத்தில் உணவு வீணடிக்கப்பட்டதை மறைமுகமாக விமர்சித்து கருத்து தெரிவித்து இருந்தார்.