பள்ளி மாணவர்களுக்கு விரைவில் உலோக தண்ணீர் பாட்டில்கள்… அமைச்சர் மெய்யநாதன் தகவல்.!
இன்று தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் விரிவுபடுத்தபட்ட காலை உணவு திட்டம் துவங்கப்பட்டது. இந்த திட்டத்தை கலைஞர் படித்த நாகை மாவட்டம் திருக்குவளை பள்ளியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உணவு பரிமாறி தொடங்கிவைத்தார். தமிழ்நாட்டில் உள்ள 31,008 தொடக்க பள்ளிகளில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 15.75 லட்சம் மாணவர்கள் பயனடைவர்கள்.
இந்த திட்டத்தை புதுக்கோட்டை அருகே முல்லூர் அரசு பள்ளியில் சுற்றுசூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் துவங்கி வைத்தார். துவங்கி வைத்து அவர் பேசுகையில், இந்தாண்டு கூடுதலாக 50 பள்ளிகளை பசுமை பள்ளிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
தற்போது பள்ளி மாணவர்கள் பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்துவதை வெகுவாக குறைத்துள்ளனர். மாணவர்களுக்கு விரைவில் உலோகத்தால் ஆன தண்ணீர் பாட்டிகள் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் 53 இடங்களில் குப்பை கிடங்குகள் பயோமைனிங் முறையில் அழிக்கப்பட்டு உயிர்நிலங்களாக மீட்கபட்டது. காவிரி, தென்பெண்ணை ஆறுகளில் கலக்கும் கழிவுநீரை சுத்தீகரிக்க 1,885 கோடி ரூபாய் செலவில் பொதுசுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது எனவும் செய்தியாளர்கள் சந்திப்பில் சுற்றுசூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.