அதிமுக என்பது ஒன்றுதான்! கட்சிக்கு எதிரானவர்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது – எடப்பாடி பழனிசாமி பேட்டி
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் உள்ளிட்ட 4 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியது. அதில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபிக் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. இதன்மூலம் பொதுக்குழு, பொதுச்செயலாளர் தேர்தல் செல்லும் என்ற தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்து இரு நீதிபதிகள் அமர்வு அதிரடியான தீர்ப்பை வழங்கினர்.
ஓபிஎஸ் உள்ளிட்ட 4 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்தனர். ஓபிஎஸ் உள்ளிட்டோரை நீக்கிய சிறப்பு தீர்மானத்துக்கு தடை விதிக்கவும் உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. நீதிபதிகள் கூறுகையில், அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது, தீர்மானங்களுக்கு தடை விதித்தால் கட்சியின் செயல்பாட்டிற்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என கூறியுள்ளனர்.
எனவே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளதால், அவரது ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், சேலத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக என்பது ஒன்றுதான், அதிமுக பலமாகவே உள்ளது. அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை உயர்நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நீதிக்கும் தர்மத்துக்கும் கிடைத்த வெற்றி.
2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெரும். கட்சிக்கு எதிரானவர்களை அதிமுக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் என்னை சம்பந்தப்படுத்தி பேசுவது தவறான விஷயம். ஆட்சியில் இருக்கும்போது சட்டரீதியான நடவடிக்கை எடுத்துள்ளோம் என மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜின் சகோதரர் தனபால், கோடநாடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என நேற்று செய்தியாளர் சந்திப்பில் பரபரப்பான தகவல்களை தெரிவித்திருந்த நிலையில், இபிஎஸ் இவ்வாறு கூறியுள்ளார்.